Published : 18 Feb 2019 07:49 PM
Last Updated : 18 Feb 2019 07:49 PM

‘போலி நேர்காணல் கடிதங்கள்... ஏமாற வேண்டாம்..’ : வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு சுங்கத்துறை எச்சரிக்கை

வேலைதேடுவோரை  ஏமாற்றும் நோக்கத்துடன் ‘மனசாட்சியற்ற’ சில சக்திகள் போலி நேர்காணல் கடிதங்களை அனுப்பி சுங்கத்துறையில் வேலையில் சேர ஆசைக்காட்டி மோசம் செய்யும் கும்பல் ஒன்று கிளம்பியிருப்பதாக சென்னை சுங்கத்துறை ஆணையர் அலுவலகச் செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து சென்னை சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாவது:

 

ஜூனியர் கிளார்க்குகள், ஆபீஸ் அசிஸ்டெண்ட் பொறுப்புகள் காலியாக இருப்பதாகவும் சுங்கத்துறையில் சேர வாய்ப்பு என்றும் கூறி வேலை தேடி அலையும் அப்பாவிகளை ஏமாற்றி மோசடி செய்யும் நோக்கத்துடன் கும்பல் ஒன்று போலி நேர்காணல் கடிதங்களை அனுப்பி வருவதாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

எங்கள் அலுவலகத்திலிருந்து அது போன்ற நேர்காணல் கடிதங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று பொதுமக்களுக்கு நாங்கள் தகவலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

 

இந்தத் துறைக்கான ஆட்தேர்வுகள் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் மூலமாகவோ சுங்கத்துறை அறிவிக்கை மூலம் பணித்தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அது முக்கியச் செய்தித்தாள்களில் வெளியாகியும் சுங்கத்துறை இணையதளத்தில் வெளியாகியும் தேர்வுகள் நடத்தப்பட்டே செய்யப்படுகின்றன.

 

ஆகவே மோசடியாக சுங்கத்துறை பெயரில் சில விஷமிகள் வெளியிடும் நேர்காணல் கடிதங்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.  இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது சுங்கத்துறை முதல் தகவலறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது.

 

ஆகவே, இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மோசடி கும்பல்களின் மனசாட்சியற்ற செயல்களுக்கு இரையாகி விட வேண்டாம் என்றும் பொதுமக்களை சுங்கத்துறை கேட்டுக் கொள்கிறது.

 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x