Published : 08 Feb 2019 03:18 PM
Last Updated : 08 Feb 2019 03:18 PM

பட்ஜெட்டில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை அறிவிப்பு வெளியிடவில்லை: வைகோ கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை அறிவிப்பு வெளியிடாதது கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசு 2011 இல் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நிதி அமைச்சர் தாக்கல் செய்து வரும் வரவு - செலவுத் திட்டத்தின் தொகுப்பாக இந்த நிதிநிலை அறிக்கை காட்சி அளிக்கிறது.

2019-20 வரவு - செலவுத் திட்டத்தில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

தமிழக அரசின் கடன் சுமை கடந்த ஆண்டைவிட 42 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. மொத்தக் கடன் 3.97 லட்சம் கோடி என்று அறிவித்துவிட்டு, முக்கியமான துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டுள்ளது. இது எவ்வாறு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்?

வேளாண் துறை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஆண்டைவிட கூடுதலாக வெறும் 1,634 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழு விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவோடு 50 விழுக்காடு சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன்படி நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 நிர்ணயிக்க வேண்டும். ஆனால் சாதாரண ரகம் ரூபாய் 1,800 என்றும், சன்ன ரகம் ரூபாய் 1,830 என்றும் கொள்முதல் விலை நிர்ணயித்து இருப்பது ஏமாற்றம் தருகிறது.

கரும்புக் கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000 என்று உயர்த்தாமலும், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை இரண்டாயிரம் கோடி ரூபாயைப் பெற்றுத் தராமலும், கரும்பு ஊக்கத் தொகை வழங்க வெறும் இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது கண்துடைப்பு.

'கஜா' புயலால் பேரழிவுக்கு உள்ளான காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.1,700 ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த மக்களின்  நிரந்தர மீள் வாழ்வுக்கு உரிய திட்டங்கள் இல்லாதது வேதனை அளிக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருஅக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 11 நாட்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

காவிரி பாசனப் பகுதிகளில் மக்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு துணைபோய்க்கொண்டு இருப்பது மன்னிக்கவே முடியாது.

தமிழ்நாட்டில் ஐம்பதாயிரம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த வரவு - செலவுத் திட்டத்தில் சிறு, குறு தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்திருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக வெறும் 250 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

சுகாதாரத் துறை, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானது அல்ல.

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவற்கு செயல் திட்டம் எதுவும் இல்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணைபோவதை தமிழக அரசு கடுமையாகக் கண்டித்து இருக்க வேண்டும். மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பாஜக அரசு பறித்து வரும் நிலையில், அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அரசு கவலைப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அறிவிப்பு இல்லாதது அதிமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் காட்டுகிறது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு எந்த அறிவிப்பும் இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பதற்கு முன்வராதது, விலைவாசி ஏற்றத்தை தடுக்க இந்த அரசுக்கு உள்ள அக்கறையின்மையைக் காட்டுக்கிறது.

தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதுவும் இல்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீதர் குழு அறிக்கை பரிசீலிக்கப்படும் என்பதும், 7 ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய சித்திக் குழு அறிக்கை பரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் நல்வாழ்வுக்கு பேராபத்தாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை அறிவிப்பு வெளியிடாதது கண்டனத்துக்கு உரியது" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x