Published : 11 Feb 2019 02:19 PM
Last Updated : 11 Feb 2019 02:19 PM

ஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வரவேற்கத்தக்கது; நிரந்தரமாக்க வேண்டும்: ராமதாஸ்

 ஏழைகளுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.

தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும். 'கஜா' புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், அத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாததால் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் போதுமான நாட்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் காணப்படுகிறது. வறட்சிக் காலங்களில் மக்களின் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது தான். அதன்மூலம் அவர்களின் வறுமையை ஓரளவாவது போக்க முடியும்.

ஆனால், அந்தத் திட்டத்தின் செயல்பாடே தடுமாற்றத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தின்  மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டிய நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 37.48 நாட்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 2016-17 ஆம் ஆண்டில் வேலை வழங்கப்பட்ட 63.87 சராசரி நாட்களுடன் ஒப்பிடும் போது இப்போது பாதியளவு நாட்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

மற்றொருபுறம் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இன்றுடன் 103 நாட்களாகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2,000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

அதேநேரத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை என்பது இப்போது மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அவர்களுக்காக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதியம் கிடையாது. இதனால் அவர்களால் வறுமையின் பிடியிலிருந்து மீள முடிவதில்லை. அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.2,500 வழங்கும் வகையில் அடிப்படை வருமானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 6 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாமக வலியுறுத்தியிருந்தது.

அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போது அறிவித்துள்ள ரூ.2,000 நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமைபும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும்" என, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x