Published : 06 Feb 2019 05:07 PM
Last Updated : 06 Feb 2019 05:07 PM

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுக: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக ஆட்சி என்றாலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன் வைக்கிற நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்காமல் புறக்கணிக்கிற காரணத்தினால் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எஸ்மா சட்டம் ஏவி விடப்பட்டு ஒடுக்கப்பட்டதை எவரும் மறக்க முடியாது. அந்த பாரம்பரியத்தில் வந்த இன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் அதே அடக்குமுறையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக கையாண்டு வருகின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பள்ளிக்கு வராதவர்கள், தேதி வாரியாக கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாராகி வருவதாக கல்வித்துறை இயக்குநர் மிரட்டல் தொனியில் கருத்து கூறியிருக்கிறார்.

தங்கள் மீது ஏவிவிடப்பட்ட கடுமையான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் முதல்வரைச் சந்தித்து முறையிட முயன்றனர். ஜனநாயக நாட்டில் போராடுகிற அரசு ஊழியர்களைச் சந்திக்க முதல்வர் தயங்குவது ஏன் ? மன்னர் ஆட்சியாக இருந்தால் மறுக்கலாம். ஜனநாயக ஆட்சியில் சந்திக்க மறுக்கலாமா ?

முதல்வரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை செவிமடுக்காமல் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைக்காக பட்டியல்கள் தயாராகி வருகின்றன. இந்தப் போக்கு நீடிக்குமேயானால் இதைவிடக் கொடிய அடக்குமுறை வேறு எதுவும் இருக்க முடியாது.

ஜனநாயக நாட்டில் கோரிக்கை எழுப்புவது, குரல் கொடுப்பது, போராடுவது, வேலை நிறுத்தம் செய்வது அடிப்படை உரிமையாகும். அத்தகைய உரிமைகளை அதிமுக அரசு பறிக்குமேயானால் கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழக மக்கள் 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தகைய பாடத்தைப் புகட்டினார்களோ, அதைவிட பலமடங்கு கூடுதலான படிப்பினையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்குவார்கள் என்பதை அதிமுக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் அடித்தளமாக விளங்குபவர்கள். அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு ஒரு அரசு இயங்க முடியாது. அப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும்" என கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x