

அபிநந்தன் தமிழனின் பெருமையை உலக அளவில் உயர்த்தியிருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள விமானி அபிநந்தன், சென்னையைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபிநந்தன் மனைவி, குழந்தையுடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், இன்று (வியாழக்கிழமை) மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தன் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அபிநந்தனை நினைக்கும்போது இந்தியனாக, குறிப்பாக தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கின்றோம். இந்திய நாட்டின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. பல போர்களில் வெற்றிக்கொடி நாட்டியது இந்தியா. போர்ச்சூழலில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது.
அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டதற்கு, இந்திய அரசு கடுமையான கண்டனங்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அவரைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவ்விவகாரத்தில் பாகிஸ்தான், ஜெனிவா ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதே எல்லோரின் நிலைப்பாடு. பாகிஸ்தான் அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்கும் நிலை ஏற்படும். எல்லோருடைய பிரார்த்தனைக்கு ஏற்றாற்போல் அவர் திரும்பி வருவார்.
தீவிரவாதத்தின் வால் ஒட்ட நறுக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைதி திரும்பும்.
அபிநந்தன் பெற்றோரின் நிலையைப் பார்த்தோம். இப்படிப்பட்ட பெற்றோரைப் பெறுவதற்கு தவம் செய்திருக்க வேண்டும். மன தைரியத்துடன் எங்களுடன் அவர்கள் பேசியது மறக்க முடியாதது. அபிநந்தனின் தாத்தா இரண்டாம் உலகப்போரிலும், தந்தை கார்கில் போரிலும் முக்கியப் பங்காற்றியவர்கள். இன்றைக்கு அபிநந்தன் இத்தகையை தியாகத்தைச் செய்து இந்தியாவின் பெருமையை, தமிழனின் பெருமையை உலக அளவில் உயர்த்தியிருக்கிறார். அவருக்கு வணக்கங்கள்.
அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அபிநந்தனின் பெற்றோருக்குத் திருப்தி அளிக்கின்றன. அவர்கள் வீர த் தந்தையாகவும் தாயாகவும் இருக்கின்றனர்".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.