Published : 16 Feb 2019 09:33 AM
Last Updated : 16 Feb 2019 09:33 AM

பராசக்தி ஹீரோ!- பேரை கேட்டா சும்மா அதிருதுல்ல...

கொங்கு மண்டலத்தில் சிவாஜியின் நினைவுகள்

ஆர்.கிருஷ்ணகுமார், எஸ்.கோபு, இரா.கார்த்திகேயன், ஆர்.டி.சிவசங்கர்

ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இவர்களையெல்லாம் நினைத்த உடனேயே நம் நினைவுக்கு வருவது சிவாஜி மட்டும்தான். அவரது புருவமும் நடிக்கும். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகேயுள்ள வேட்டைத்திடலில் 1928 அக்டோபர் 1-ல் பிறந்த கலைத் தாயின் தலைமகன், ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்துள்ளார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத் திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்றழைத்தார். பின்னர் `சிவாஜி’ என்ற பெயர் நடிப்பின் இலக்கணமானது.

ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட தமிழ்த்  திரைப்படங்கள், ஒன்பது தெலுங்கு படங்கள், இரண்டு இந்தி படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ள சிவாஜி நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடித்தாலும், நேர்மறை, எதிர்மறை, நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கியவர்.

காவிரி பெற்றெடுத்த பிறவிக் கலைஞர் சிவாஜிக்கு சிறு வயதில் படிப்பில் நாட்டமில்லை. ஆனால், எத்தனை பக்க வசனமாக இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும்,சிறிதும் பிசிறில்லாமல் பேசும் ஆற்றல் சிவாஜிக்கே உரியது. நடிப்பை  தவமாக, மூச்சாக கொண்ட இவரது வருகைக்கு முன் கொஞ்சம் நமுத்துப் போயிருந்த தமிழ்த் திரையுலகம், சிவாஜியின் கர்ஜனையால் எழுந்து ஓடியது. இப்போதெல்லாம் சில படங்களில் நடித்த உடனேயே இமேஜ் பார்க்கும் நடிகர்கள் உண்டு. ஆனால், இமேஜ் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், எந்த பாத்திரமானாலும் ஏற்றுநடித்தவர் சிவாஜி. அவர் இருந்தபோது, உலகமே அவரைப் போற்றினாலும், உள்ளூரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்ற குறை கொஞ்சம் உண்டு. ஆனால், விருதெல்லாம் அவருக்கு பொருட்டே அல்ல. ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்னமும் சிவாஜி வீற்றிருப்பதே அவருக்கான பெரிய விருது.

பாரம்பரியம் மிக்க இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை` நடிப்புலகச் சக்கரவர்த்தியைக் கௌரவிக்கும் வகையில் `சிம்மன் குரலோன் 90’ என்ற நிகழ்ச்சியை ஏற்கெனவே சென்னையில் நடத்தியது. தற்போது கொங்கு மண்டலத்திலும் சிவாஜியின் புகழைக் கொண்டாட முனைந்திருக்கிறது. கோவை அவினாசி சாலையில், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் `சிம்மக் குரலும் திரைத் தமிழும்` என்ற நிகழ்ச்சியில், நடிகர் சிவகுமார், எழுத்தாளர் டி.ஏ.நரசிம்மன், சிவாஜியின் மகன் ராம்குமார் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், கொங்கு மண்டலத்துக்கும் சிவாஜிக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் மூத்தோர்களை சந்தித்தோம்.

வேட்டைக்குச் சென்ற வரலாறு

சிவாஜி கணேசனால், `தம்பி கிட்டு` என பாசத்துடன் அழைக்கப்பட்ட தாத்தூர் கிட்டு கவுண்டர், சிவாஜி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

“கோவை வேட்டைக்காரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்க கவுண்டரும், சிவாஜியும் நெருங்கிய நண்பர்களான வரலாறு சுவாரஸ்யமானது.

திரையில் பிஸியாக இருந்த நேரத்திலும், வேட்டையாடுவதில் சிவாஜிக்கு மிகுந்த விருப்பம் இருந்துள்ளது.  திருச்சி, பெரம்பலூரில்  காட்டுப் புறா, முயல், காடை, கௌதாரிகளை வேட்டையாடிக்  கொண்டிருந்த சிவாஜிக்கு, தட்சிணாமூர்த்தி என்ற காவல் துறை அதிகாரியின் நட்பு கிடைத்தது. ஆனைமலையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த அவர், வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த முத்துமாணிக்க கவுண்டர் பெரும் வேட்டைக்காரர்  என்று கூறி, அவரது வேட்டையாடும் திறமைகளை விளக்கியுள்ளார். இதையடுத்து, ஆனைமலையில் தட்சிணாமூர்த்தி வீட்டில்,  முத்துமாணிக்க கவுண்டரை சந்தித்துள்ளார் சிவாஜி. இதற்குப் பிறகு,  கொங்கு மண்ணுடன்  சிவாஜிக்கான தொடர்பு ஆழமாக வேரூன்றத்  தொடங்கியது. மாமன், மச்சான், மாப்பிள்ளை என அழைக்கும் அளவுக்கு, சேத்துமடைக்கும், சூரக்கோட்டைக்கும் உறவு வளர்ந்தது.  முத்துமாணிக்க கவுண்டரின் உறவினர்கள், சிவாஜிக்கும் உறவினர்களானார்கள்.

சிவாஜிக்கு  வேட்டைக் கலையை கற்றுத் தந்தார் முத்துமாணிக்க கவுண்டர்.  டபுள்பேரல் துப்பாக்கியை மட்டுமை பயன்படுத்தி  வந்த சிவாஜிக்கு,  முத்துமாணிக்கம் வைத்திருந்த சக்திமிக்க ரைபிள் வகைகளான 316, 423, 500 எக்ஸ்பிரஸ் ஆகியவை  வியப்பளித்தன.

முதல் வேட்டை

ஒருநாள் சிவாஜி, முத்துமாணிக்கம், அவரது தம்பி ரத்தினம், உறவினர்கள் சின்னுசாமி, பொன்னுசாமி, ராஜாராம் ஆகியோர், அந்திசாயும் நேரத்தில் சேத்துமடை வனப் பகுதிக்குள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். தேக்கடி ஆறு, கல்யாணகுடை ஆறுகளைக் கடந்து,  ஐயப்பன் பொதிகை வனப் பகுதியை தாண்டியபோது, பாதையின் குறுக்கே ஒன்றரை டன் எடையுள்ள காட்டெருமை அவ்வழியே சென்றது.

ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்த முத்துமாணிக்கம், `சுடுங்க கணேசன்` என்ற கூறிவிட்டு, அவரும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருவரின் துப்பாக்கிகளில் இருந்த தோட்டாக்களும் அந்தக் காட்டெருமையைத் துளைத்தன. முதல் வேட்டையில், முதல் குறி தப்பாமல், தோட்டா  இலக்கை வீழ்த்திய சந்தோஷம்   சிவாஜிக்கு. இது, வேட்டையின் மீது அவருக்கிருந்த ஆர்வத்தை அதிகரித்தது.  சிவாஜிக்கும், முத்துமாணிக்கத்துக்கும் அன்று அரும்பிய நட்பு,  இரு குடும்பத்துக்கும் இடையே உறவாய் மாறியது.  `ஏனுங்க, என்னங்க, சொல்லுங்க` என  சிவாஜியை கொங்குத்  தமிழ் பேச வைக்கும் அளவுக்கு,  கொங்கு மண்ணோடு நெருக்கமாக்கியது.

புலி வேட்டையாடிய சூரக்கோட்டை சிங்கம்

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத்  மாவட்டத்தில்  உள்ள கூடம் வனப்பகுதி, வேட்டையில் தேர்ந்த கோன்ட் இன பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதி. அங்கு, அடர்ந்த காடுகளில் வரிப் புலிகளும், சிறுத்தைகளும் அதிகம். முத்துமாணிக்கம், சிவாஜி, லங்கப்பூர் அரசர்கள் ஜெயசிம்மராஜா, கஜசிம்மராஜா, கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் புலி வேட்டைக்குக்  கிளம்பினார்கள். அப்போதெல்லாம் வேட்டையாட தடை கிடையாது.

ஆண் ஒற்றை யானையை, 12 அடி தூரத்திலிருந்து  நேருக்கு நேர் நின்று, யானையின் நெற்றிப்  பொட்டில் சுட்ட முத்துமாணிக்கத்தின் நெஞ்சுரத்தைக் கண்டு, பிரமித்துப் போனார் சிவாஜி.

அந்த வனப் பகுதியில் உயர்ந்த மரங்களின் மீது பரண் அமைத்து,  ‘கலைப்பு வேட்டை’ எனப்படும் ஒலிகளை எழுப்பி, விலங்குகளை மறைவிடங்களிலிருந்து வெளியேற வைக்க முயன்றனர். அப்போது,  புதரிலிருந்து வெளியேறிய வரிப் புலியை சுட்டு வீழ்த்திய சிவாஜியின் துப்பாக்கி, சில விநாடிகளில்  மீண்டும் வெடித்து மற்றுமொரு புலியை வேட்டையாடியது. இரு புலிகளை வேட்டையாடிய சூரக்கோட்டை சிங்கத்தைக் கண்டு வியந்தனர் அத்தனை பேரும்.

எனது இளமைக் காலத்தில் பெரும்பகுதியை சிவாஜியுடன் கழித்தேன். பல கலாட்டாக்களை செய்வார் சிவாஜி. ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு,  இருவரும் ஒரே அறையில் உறங்கினோம். திடீரென எழுந்த சிவாஜி, `டேய் கிட்டு... படத்துல வர்ர டாக்டர் மாதிரி கூச்சல் போடறேன் பாரு’னு சொல்லி, சிம்மக்குரலில் அலறல் கொடுத்தார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிவாஜியின் தாய் ராஜாமணி அம்மாள், மனைவி கமலா, அக்கா சாந்தி ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு வந்தனர். ஆனால், சிவாஜி போர்வையை போர்த்திக்கொண்டு, தூங்குவதுபோல நடித்தார். அவர்கள் என்னிடம் என்னவாயிற்று என்று கேட்டபோது, அவரிடமே கேளுங்கள் என்றேன். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார் சிவாஜி.  இவரது சப்தத்தால் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள்கூட எழுந்துவிட்டார்கள்” என்றார் கிட்டு கவுண்டர் பழைய நினைவுகள் தந்த மகிழ்ச்சியுடன்.

சிவாஜி பிறந்த நாளுக்கு `கேக்`

திருப்பூரைச் சேர்ந்த அகில இந்திய சிவாஜி மன்றச் செயலாளர் ஜி.கே.பிரசன்னகுமார் கூறும்போது, “திருப்பூரில் தற்போது `தேவி கேக் ஷாப்` பிரசித்தம். அதே இடத்தில் முன்பு செயல்பட்டு வந்த கே.ஜி. பேக்கரி என்ற எங்களது கடையும் புகழ் பெற்றிருந்தது. எனது தந்தை கோபாலன் கடையை நடத்தி வந்தார். அவருக்குப் பின் நானும், தம்பி ஜி.கே.ராஜசேகரும் கடையை நடத்தி வந்தோம். இந்தப் பகுதியில் எங்கு சிவாஜியின் படப்பிடிப்பு நடந்தாலும், அதைப் பார்க்க சென்றுவிடுவோம்.

ஒருமுறை கேரள மாநிலத்தில் மோகன்லாலுடன் ’யாத்ராமொழி’ சூட்டிங்கில் நடித்துக்  கொண்டிருந்தார். சிவாஜியைப் பார்க்கச்  சென்றபோது, ‘என்ன, இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியமாட்டேங்குது’ னு கூறினார். பின்னர், அங்கிருந்து வந்த நாங்கள், திருப்பூரிலிருந்து தினமும் கூரியர் மூலம் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள், அரசியல் பத்திரிகைகள் அனுப்பினோம். பின்னர், எங்களிடம் மிகுந்த பாசம் வைத்தார். ‘திருப்பூரில் என் மகன் பிரசன்னகுமார் இருக்கிறார்` என்று விஐபி-க்களிடம் அறிமுகப்படுத்துவார்” என்றார் கண்கலங்கியபடி.

அவரது இளைய சகோதரர் கே.ஜி.ராஜசேகரன் கூறும்போது, “எங்கள் பேக்கரியில்  தயாரிக்கப்படும் கேக், பிஸ்கெட்டை சிவாஜி விரும்பிச் சாப்பிடுவார். அவரது பிறந்த நாளையொட்டி, 1979-ம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அக். 1-ம் தேதி தவறாமல் கேக் கொண்டு செல்வோம். 25 கிலோ கேக்கை சிறப்பாக தயாரித்து, அங்கு கொண்டுசெல்வோம். அதேபோல, மே 1-ல் அவரது திருமண நாளுக்கும், கமலா அம்மாவுடன் இணைந்து, நாங்கள் கொண்டுசெல்லும் கேக்கை வெட்டுவார். இதை எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதினோம். விக்ரம்பிரபுவின் திருமண நிச்சயத்துக்கு நாங்கள் சென்றிருந்தோம். அப்போது கமலா அம்மா எங்களிடம் உரிமையுடன், “நிச்சய சீர் வரிசையில் ஒரு பொருள் குறையுது தெரியுதா ராஜா? என்னன்னு சொல்லு?” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது அவர், “நம்ம கடை மக்ரோன் பிஸ்கெட் இல்லை”என்றார்.  அந்த அளவுக்கு எங்களை நேசித்தனர். எங்கள் பேக்கரியின் மக்ரோன் பிஸ்கெட்டை சிவாஜி விரும்பிச் சாப்பிடுவார்” என நெகிழ்ந்தார்.

எங்கள் வீட்டில் சமைத்த கமலா அம்மா!

நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபலமானது குமரன் இல்லம். இதன் உரிமையாளர் எஸ்.டி.லஜபதி, சிவாஜியின் நண்பர். படப்பிடிப்புக்காக உதகை வந்தால், இவரை சந்திக்காமல் செல்ல மாட்டார் சிவாஜி.

“எனது தந்தைக்கு சாண்டோ சின்னப்பதேவர் மிகவும் நெருக்கம். அவர் மூலம், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் எனக்குப் பழக்கமானார்கள். பின்னர், நானும், சிவாஜியும் நெருங்கிய நண்பர்களானோம். உதகை தாசபிரகாஷ் ஹோட்டலில் தங்கும் சிவாஜிக்கு, எங்கள் வீட்டில் சமையல் நடக்கும். கமலா அம்மா, எங்கள் வீட்டில் சிவாஜிக்கு மட்டுமின்றி, எங்களுக்கும்  சேர்த்து சமைப்பார். காலையில் படப்பிடிப்பு முடிந்து, மாலையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்து விடுவார். அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டு, இரவு அறையில் உறங்குவார். ஒருநாள் விடியல் காலையில் வீட்டுக் கதவை சிவாஜி, கமலா அம்மா தட்டினர். என்னவென்று கேட்டபோது, ‘மார்டன் லாட்ஜில் தங்கியிருந்த டைரக்டர் சங்கருக்கு ஹார்ட் அட்டாக்’ என்றார் சிவாஜி. நான், `இங்கு மருத்துவ வசதி குறைவு, உடனடியாக கோயம்புத்தூர் கொண்டுசெல்லுங்க`  என்றேன். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார் சங்கர். சிவாஜி குழந்தை மாதிரி. வெகுளியான, நேர்மையான மனிதர். நாங்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தோம். இதனால் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைந்திருந்தோம். அவர் புதிய கட்சி தொடங்கியதும், உதகை வந்து என்னை தொடர்புகொண்டார்.  ஆனால், நான் அவருடன் செல்லாமல்,  காங்கிரஸ் கட்சியிலேயே இருந்துவிட்டேன். அவர், கட்சியைக் கலைத்த பின்னர், ஓரிரு முறை மட்டுமே உதகை வந்தார். அப்போது எங்களை  அழைத்துப் பேசினார். 1990-களுக்குப் பின்னர் அவர் உதகை வரவில்லை” என்றார் லஜபதி.

முதலாளினு தமாஷா கூப்பிடுவாரு சிவாஜி

கோவைக்கு சிவாஜி வந்தால் அதிகம் தங்குவது, ரயில் நிலையம் எதிரேயுள்ள ஆர்.ஹெச்.ஆர். ஹோட்டலில்தான். இவரது ராயல் தியேட்டரில் நிறைய சிவாஜி படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர் ஜி.ரத்தினவேலுவை சந்தித்தோம்.

82 வயதிலும் சிவாஜியைப் பற்றிப் பேசத் தொடங்கியவுடன், அவரது முகம் மலர்ந்தது. “ஆரம்பத்துல வேற ஹோட்டல்ல தங்கினாலும், ஒருகட்டத்துல எங்க ஹோட்டல்லதான் தங்குவாரு. அது வெஜிடேரியன் ஹோட்டல். அதனால, ஹோட்டலுக்குப் பக்கத்துல இருக்கற எங்க வீட்டுக்கு வந்து, உரிமையா நான்-வெஜ் செஞ்சிக் கொடுங்கனு கேட்டு சாப்பிடுவாரு. ரொம்ப சாதாரணமா இருப்பாரு. அவரோட தூக்குதூக்கி, பாசமலர், சிவந்தமண், படிக்காதமேதை, தங்கப்பதக்கம் படமெல்லாம் ராயல் தியேட்டர்ல 100 நாளைக் கடந்து ஓடுச்சி. அப்பல்லாம் வெற்றி விழாவுக்கு வந்து, ரசிகர்களோட பேசுவாரு. எங்க அண்ணன் சுந்தரவேலுவை முதலாளினு தமாஷா கூப்பிடுவாரு. அவருக்கு பயங்கர ஞாபகசக்தி. பராசக்தி படம் வெளியாகி பல வருஷத்துக்கப்புறம் கோயம்புத்தூர் வந்தப்ப, அந்த வசனத்தை பேசிக்காட்டினாரு. எங்க வீட்டு திருமணத்துக்கெல்லாம் வந்து வாழ்த்தினாரு” என்றார் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x