

எங்கள் உறவு வேண்டும் என்று கேட்கும் பாஜகவினர், மக்களவையில் அதிமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தபோது எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் என மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பாளையத்தில் பாலக்காடு - சென்னை ரயில் நின்று செல்ல வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட் களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பாளையம் ரயில்நிலையத்தில் ரயில் ஒரு நிமிடம் நின்று செல்ல ரயில்வே துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற ரயில் பாளை யம் ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது. இதை மக் களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசிடம் மூன்று ஆண்டுகளாக கோரிக்கை விடுத்ததன் விளைவாக தற்போது பாலக்காடு - சென்னை ரயில் பாளையம் ரயில் நிலையத்தில் தினமும் காலை, இரவு நேரங்களில் நின்று செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மேகே தாட்டு அணை விவகாரம் குறித்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 34 பேரை சஸ்பெண்ட் செய்தார்கள். ஆனால், பிற மாநில உறுப்பினர்கள் ஒருவர் கூட எங்களுக்கு ஆதரவு தரவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் எங்களிடம் கூட்டணி வைக்க துடிக்கும் பாஜகவினர்கூட அதிமுக எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது வேதனை தருகிறது. ஆனால், நாங்கள் பல சமயங்களில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.