Published : 24 Jan 2019 04:24 PM
Last Updated : 24 Jan 2019 04:24 PM

கோடநாடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து போராடும்; ஸ்டாலின்

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோடநாடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று (வியாழக்கிழமை) சென்னை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

"கோடநாடா? கொலை நாடா? என்ற நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'ஒரு கொலைக் குற்றவாளி' என்பதை ஆதாரங்களோடு சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை தமிழக ஆளுநர் எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் ஏற்கெனவே, நேரடியாக 4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அவரிடத்தில் ஒரு புகார் மனுவைத் தந்திருக்கின்றோம்.

அந்த நான்கு புகார்களில் ஒன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். அப்பொழுது தான், உண்மையான முறையான ஒரு விசாரணை நடைபெற முடியும். அடுத்து இரண்டாவதாக ஆளுநர் உடனடியாக குடியரசு தலைவரிடம் நேரடியாகச் சென்று இதுகுறித்து விளக்கிச் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதி மேற்பார்வையில் ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். நான்காவதாக, மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படக்கூடிய ஓட்டுநர் கனகராஜ் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். எனவே, அவருடைய மர்ம மரணம் குறித்தும் முறையான விசாரணை நடத்த வேண்டும்.

ஆனால், இதுவரையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்ற செய்திகள் வரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், அதிமுக அமைச்சர்கள் உட்பட பலர் மீதான புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "மத்திய அரசு பின்னால் இருந்துகொண்டு இவர்களுக்கு முழு ஆதரவு தந்துகொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இருந்தாலும், இதை நாங்கள் விடப்போவதில்லை. தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களைத் திமுக நடத்தும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு போலி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும்" என ஸ்டாலின் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x