

கோவைக்கு முதல்முதலாக ஐரோப்பிய நாட்டு பறவைகள் வலசை வந்துள்ளன.
ஆனைக்கட்டி சேக்கான் பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில், 25 அணிகள் கோவை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வனப் பகுதி, விளைநிலங்கள் ஆகியவற் றில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டன. அதில் கோயம் புத்தூர் நேச்சர் சொசைட்டியைச் சேர்ந்த பி.பி.பாலாஜி தலைமையில், ஏ.பாவேந்தன், என்.சுல்தானா, எஸ்.சுந்தர்ராஜ், சதீஷ் சென்னியப்பன் ஆகியோர் பள்ளப்பாளையம் ஏரி, கண்ணம்பாளையம், கலங்கல் ஆகிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டெம்னிக் ஸ்டின்ட், பிளேக் டெய்ல்டு காட்விட்ஸ், ரஃப், காமன் கிரீன் ஷாங்க், மார்ஷ் சாண்ட்பைப் பர், யூரோசியன் விட்ஜியான், நாதர்ன் சாவ்லர், கார்கனி, நாதர்ன் பின்டெய்ல், காமன் டீல், ஒயிட் ஸ்டார்க் மற்றும் பிளாக் ஸ்டார்க் எனப்படும் நாரை ஆகிய வெளி நாட்டுப் பறவைகள் வலசை வந் துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கோயமுத்தூர் நேச்சர் சொசைட்டியைச் சேர்ந்த ஏ.பாவேந்தன் கூறியதாவது:
இமயமலையையொட்டியுள்ள பகுதிகள், சீனா, மங்கோலியா நாடுகள், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், 'யூரோசியா' எனப்படும் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் இருந்து பறவைகள் கோவைக்கு வலசை வந்துள்ளன. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மேற்கண்ட நாடுகளில் கடுங்குளிர் நிலவும். அதை பறவைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. பழங்கள், பூச்சிகள் போன்ற உணவுகளும் அவற்றுக்குக் கிடைக்காது.
இந்த காலகட்டத்தில் இந்தியா வில் தென் மேற்கு பருவமழை முடிந்து, வட கிழக்கு பருவமழை தொடங்கும். பறவைகளுக்கு உணவாக தாவரங்கள் செழித்து வளரும், பழங்கள் காய்த்துக் குலுங் கும், பூச்சியினங்கள் பல்கிப் பெருகி யிருக்கும். இதேபோல் வெது வெதுப்பான காலநிலையும் நிலவும். இவற்றை அனுபவிப் பதற்கு, பறவைகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு வருகின்றன. இதேபோல் இலங்கை, தென் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் பூமத்திய ரேகைக்கு கீழே உள்ள நாடுகளுக் கும் பறவைகள் வலசை செல்லும். இது ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் வழக்கமான நிகழ்வு.
புதுவரவு
இந்த ஆண்டு புதுவரவாக முதல்முறையாக ஒயிட் ஸ்டார்க் மற்றும் பிளாக் ஸ்டார்க் எனப்படும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கருங்கால், செங்கால் நாரைகள் கோவைக்கு வலசை வந்துள்ளன. இவை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காணப்பட்டாலும், மேற்கு பகுதியில் அதுவும் கோவையில் காணப்படுவது இதுவே முதல்முறையாகும்.
23 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளப்பாளையம் ஏரியில் 56 இனங்களைச் சேர்ந்த 544 பறவைகள் காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பறவைகள் சுமார் 3 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து கோவைக்கு வந்துள்ளன. இவை வரும் மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை கோவையில் காணப்படும். அதன்பிறகு சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிடும். ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்து வலசை செல்லும் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் வழக்கமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்விடங்கள் பாதுகாப்பு
“வலசை வரும் பறவைகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதேபோல் குளக்கரையோரங்களை இயற்கை மாறாமல் பராமரிக்க வேண்டும். எல்லா பறவைகளும் நீரில் வாழாது. நிலத்திலும் வாழும். அவை உணவு தேடுவதற்கு ஏற்ற சூழல் இருக்க வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தால் மட்டுமே அவை ஏப்ரல் மாதம் வரை சிரமமின்றி வசிக்க முடியும். வாழ்விடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், பறவைகளின் வருகை குறைந்துவிடும்” என்கின்றனர், ஆர்வலர்கள்.