

புத்தாண்டு கொண்டாட மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் மாநகர பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், ஒருவர் படுகாயமடைந்தார். நிற்காமல் சென்ற பேருந்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் ஜெயசுதன் (20). இவரது நண்பர் நாசர் கான் (20) வளசரவாக்கம் காந்தி சாலையில் வசித்து வருகிறார். புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் இருவரும் முடிவு செய்தனர். புத்தாண்டை மெரீனா கடற்கரையில் கொண்டாட முடிவு செய்த ஜெயசுதன் மோட்டார் பைக்கில் வளசரவாக்கம் வந்து நண்பர் நாசரை அழைத்து கொண்டு மெரீனாவுக்கு சென்று கொண்டிருந்தார்.
வழக்கமாக பைக்கை ஓட்டும் ஜெயசுதன் ஓட்டாமல் தனது பைக்கை நாசரிடம் ஓட்டக்கொடுக்க அவர் பைக்கை ஓட்டிச் சென்றார். பின்னால் ஜெயசுதன் அமர்ந்து சென்றார். கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மேலே செல்லும் போது முன்னால் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பேருந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜெயசுதன் உயிரிழந்தார்.
படுகாயத்துடன் நாசர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்த தகவல் அறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு மாநகர பேருந்து நிற்காமல் சென்று விட்டது. அதனால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை மாநகர பேருந்தை போலீஸார் தேடி வருகின்றனர்.