திருவாரூருக்கு மட்டும் அவசர இடைத்தேர்தல் நடத்துவது ஏன்?- கி.வீரமணி

திருவாரூருக்கு மட்டும் அவசர இடைத்தேர்தல் நடத்துவது ஏன்?- கி.வீரமணி
Updated on
1 min read

தமிழக சட்டப் பேரவையில் 20 இடங்கள் காலியாக இருக்கும்போது திருவாரூருக்கு மட்டும் அவசரமாக இடைத் தேர்தல் நடத்துவது ஏன்? 20 தொகுதி இடைத் தேர்தல் ஆட்சிக்கு எடைத் தேர்தலாக மாறும் என்பதாலா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன என்று தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிசில மாதங்கள் - பல வாரங்கள் ஆகிவிட்டன.பாதிக்கப்பட்டவர்களில் எவரும் உயர் நீதிமன்ற நீதிபதி (ஜஸ்டீஸ் சத்திய நாராயணா) தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு (அப்பீல்) ஏதும் செய்யவும் இல்லை.

இந்நிலையில் 20 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் 2018 ஆகஸ்ட் கருணாநிதி மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதில் மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் தான் என்ன?

பின்னது கிடக்கட்டும்; முன்னது ‘க்யூ’வை உடைத்து சில ‘குண்டர்கள்’ முன்னே வந்து நிற்கும் காட்சிபோல, திருவாரூர் இடைத் தேர்தல் 2019 ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று டிசம்பர் 31 மாலை அறிவித்திடும் சட்டப்படி, நியாயப்படி, ஜனநாயகப்படி 30ஆம் நாள் அவகாசம் பற்றியெல்லாம் கவலைப்படாது திடீர் அறிவிப்பின் “ரகசியம்” தான் என்னவோ! திருப்பரங்குன்றத்திற்கு - நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது என்ற சாக்கு ‘ரெடிமேட்’ ஆயுதமும் கையில் இருக்கலாம்

‘மழை பெய்யும் ஆகவே தள்ளி வையுங்கள்’ என்று தமிழக அரசு முன்பே தனது தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியது போல இப்போது ஏதாவது கடித வேண்டுகோள் போயிருக்கிறதா? மழை புயல் முடிந்து விட்டது உடனே வையுங்கள் - என்று கடிதம் ஏதாவதுபோனதா?

திமுகவைப் பொறுத்தவரை அது என்றும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மையே! 20 தொகுதிக்கு தேர்தல் வைக்காமல் இதற்கென்ன தனி அவசரம்? அவற்றையும் சேர்ந்தே வைத்தால் பல வகையில் குட்டிப் பொது சட்டப்பேரவை தேர்தல் போன்று நடத்தினால், ஜனநாயகம் மேலும் காப்பாற்றப்படுவதுடன் இடைத்தேர்தல்கள் மட்டுமல்லாமல் தமிழக ஆட்சியாளருக்கு 'எடைத்தேர்தல்'களாகவும்கூட உணர்த்தும் தேர்தல்களாக இருக்குமே!

தமிழக அரசியல் கட்சிகளே இதில் நீங்கள் மேல் நடவடிக்கையாகக் குரல் கொடுத்து, ஜனநாயகத்தை  உணர்த்துங்கள்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in