

ஐஆர்சிடிசி நிறுவனம் சார்பில், வரும் பிப்.9-ம் தேதியன்று ஆந்திராவுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), பாரத தரிசன சுற்றுலா ரயில் என்ற தனி ரயிலில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சக்தி பீடங்கள் மற்றும் கோயில்களை தரிசிக்க சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதன்படி, வரும் பிப்.9-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக துவாரக திருமலாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, பெனுகுண்டாவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீட தரிசனம், ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்மநாத சுவாமி, சிம்மாசலத்தில் உள்ள வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, அரசவல்லியில் உள்ள சூரியநாராயண சுவாமி, அன்னா வரத்திலுள்ள ஸ்ரீ சத்யநாராயண சுவாமி மற்றும் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா ஆகிய கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று தரிசனம் செய்யலாம்.
5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,160 கட்டணம். இதில், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாகன வசதி, தங்கும் இட வசதி, சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை அடங்கும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய 9003140680/681 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு ஐஆர்சிடிசி வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.துவாரக திருமலா ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீடம், சிம்மாசல வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கா கோயில்களை தரிசிக்கலாம்.