

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓசூர் உணவகங்களில் வாடகை டிபன்பாக்ஸ் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
உணவுப் பொருட்களை பார்சல் கேட்டு வருபவர்களிடம், முன்பணமாக வாடகை பெற்றுக் கொண்டு உணவுக்கு ஏற்ற வகையில் சிறிய டிபன்பாக்ஸ், பெரிய டிபன்கேரியர் ஆகியவற்றில் உணவு எடுத்துச் செல்ல கொடுக்கப்படுகிறது. பின்னர் டிபன் பாக்ஸை கொடுத்து விட்டு முன்பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஓசூர் வட்டாட்சியர் அலுவலக சாலை, நியூ நெல்லைபவன் உணவக உரிமையாளர் ராமசுப்புரெட்டி கூறியதாவது:
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஓசூரில் உணவகம் நடத்தி வருகிறோம். சென்ற ஆண்டு ஜுன் மாதம் முதல் அரசு அறிவிப்பை தொடர்ந்து உணவு பார்சல் செய்வதில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து வருகிறோம். உணவு பார்சல் வாங்க பாத்திரம் மற்றும் துணிப் பைகளை கொண்டு வர வேண்டும் என்று அறிவிப்புகள் ஒட்டி இருக்கிறோம். அப்படி இருந்தும் பெரும்பாலனவர்கள் பாத்திரம் மற்றும் துணி பைகளை கொண்டு வருவதில்லை. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுகிறது.
ஆகவே சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும், வாடிக்கையாளர்களையும் இழக்கக் கூடாது என்ற அடிப்படையில் வாடகை டிபன் பாக்ஸ் முறையை ஜனவரி 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த முறையில் பாத்திரம் இன்றி உணவகத்துக்கு வருபவர்கள், எங்களிடம் உள்ள குறைந்த வாடகையில் டிபன் பாக்ஸ் அல்லது கேரியரை வாடகைக்கு பெற்று அதில் உணவு பொருட்களை பாதுகாப்புடனும், சுகாதாரமான முறையிலும் கொண்டு செல்லலாம். இதன் மூலமாக பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்களை பார்சல் செய்யும் போது ஏற்படும் நச்சுத்தன்மையை தவிர்க்கலாம்.
வீட்டின் அருகே பார்சல் குப்பைகளை போடுவதையும் தடுத்து சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம். எங்களுக்கும் இந்த வாடகை டிபன்பாக்ஸ் முறைக்கு ஒரே தடவை முதலீடாக இருப்பதால் செலவு மிச்சமாகிறது. சிறிய டிபன்பாக்ஸ் முதல் சாப்பாடு எடுத்துச் செல்ல தேவையான பெரியடிபன் கேரியர் வரை புதியதாக வாங்கி வைத்துள்ளோம். இது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு ராமசுப்புரெட்டி கூறினார்.