

பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டரை வயது மகள் கீதாஞ்சலியைப் படிக்க வைத்து முன்மாதிரியாக உள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவரது இரண்டரை வயது மகள் கீதாஞ்சலி, தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தின் அருகே செயல்படும் அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார்.
இம்மையத்தில் பயிலும் 20 குழந்தைகளுடன் கீதாஞ்சலியும் பயில்கிறார். அவர்களுடன் நட்புடன் பழகி விளையாடுகிறார். மாவட்ட ஆட்சியரின் மகளை அங்கன்வாடி தொடங்கும் நேரத்தில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தினமும் கொண்டுவந்து விட்டுச் செல்கிறார்கள்.
கீதாஞ்சலி அங்கன்வாடி மையத்தில் சேர்ந்து 2 மாதங்களே ஆவதால் அவருக்கு இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. விரைவில் சீருடை வழங்கப்படும் என்று இம்மையத்தின் அமைப்பாளர் செல்வராணியும், உதவியாளர் ரேவதியும் கூறுகிறார்கள்.
ஆட்டோ ஓட்டுநர் முதல் அரசுத்துறை உயர் அதிகாரிகள் வரையில் ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து கல்வி பயில வைக்கும் நிலையில் மாவட்டத்தின் உயர் பொறுப்பிலுள்ள ஆட்சியர் தனது மகளை அங்கன்வாடியில் சேர்த்து பயில வைப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் மற்ற அரசுத்துறை அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக இருப்பதால் அவருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு குழந்தைகளுடன் பழகவும், படிக்கவும், தமிழைக் கற்கவும் தனது மகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக ஆட்சியர் கருதுகிறார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ''திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான அங்கன்வாடி மையங்களில் விளையாட்டுப் பொருட்கள் உளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திறம்பட கற்பிக்கும் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை அவற்றில் பதிவு செய்து அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட முடியும். அந்த விவரங்களை அக்குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும்போதும் வழங்கலாம்'' என்று ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.