Published : 24 Jan 2019 05:32 PM
Last Updated : 24 Jan 2019 05:32 PM

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்ட விளம்பரத்துக்கு மட்டும் ரூ.364 கோடி செலவு; வேல்முருகன் கண்டனம்

'பெண் குழந்தைகளைக் காப்போம்' திட்டத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே 56% நிதி செலவு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' (பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்) திட்ட நிலவரம் பற்றி நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணையமைச்சர் வீரேந்திரகுமார், இத்திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; அதில் ரூ. 364 கோடியே 66 லட்சம், அதாவது 56.27சதவீதத் தொகை திட்ட விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்தப் புள்ளிவிவரத்தை அவர் படித்தபோது, அவரது பேச்சிலும் சரி, அங்க அசைவிலும் சரி, சிறு மாற்றம்கூட தென்படவில்லை; இயல்பாகவே தெரிந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இந்தப் புள்ளிவிவரம் தூக்கிவாரிப் போட்டது. இது 'செத்த மாடு கால் பணம், சுமைக் கூலி முக்கால் பணம்' போன்று உள்ளது.

இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்: இத்திட்டத்தின் கீழ், ரூ.159 கோடியே 18 லட்சம் மட்டும்தான், அதாவது 24.5 சதவீதத் தொகைதான் மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் செலவிடப்பட்டது. அப்படியென்றால் மீதி தொகையை மத்திய அரசுதான் செலவிட்டிருக்கிறது.

2018 - 2019 நிதியாண்டில் ரூ. 280 கோடி ஒதுக்கியதில் விளம்பரத்திற்குச் செலவிட்டது ரூ.155 கோடியே 71 லட்சம்; மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ரூ.70 கோடியே 63 லட்சம்; மீதி தொகை ரூ.53 கோடியே 66 லட்சம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

2017 - 2018-ல் ஒதுக்கிய ரூ.200 கோடியில் 68 சதவீதம், அதாவது ரூ.135 கோடியே 71 லட்சம் விளம்பரத்திற்கு செலவிடப்பட்டது. 2016 - 2017-ல் ரூ.29 கோடியே 79 லட்சம்; 2015 - 2016-ல் ரூ.24 கோடியே 54 லட்சம்; 2014 - 2015-ல் ரூ.18 கோடியே 91 லட்சம் விளம்பரச் செலவு.

பெண் சிசு கருக்கலைப்பைத் தடுத்தல், பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல்,பெண் குழந்தைகளைப் படிக்கவைத்தல் என்ற நோக்கிலான இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை, பிரதமர் மோடியின் சுயவிளம்பரம் என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து நாம் அக்கறை கொள்வதற்கும் கவனம் செலுத்துவதற்கும் காரணம் இருக்கிறது. தமிழக வரி வருவாயில் 75 சதவீதம் மத்திய அரசுக்கே செல்கிறது. அந்தத் தொகை இத்தகைய 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' போன்ற திட்டங்கள் மூலம் விழலுக்கு இறைத்த நீராவதுதான் நமது வேதனை.

இதனை நாடாளுமன்றத்தில் தட்டிக் கேட்பதை விட்டு, வேறென்ன வேலை தமிழக எம்.பி.க்களுக்கு என்பதும் நமது கவலை, கேள்வி.

இதற்கெல்லாம் தீர்வு, சட்டத்தின் ஆட்சி இல்லாத, சர்வாதிகார கார்ப்பரேட் ஆட்சியான மத்திய பாஜக மோடி அரசை அகற்றி, பதிலாக மாநிலங்களின் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசை ஏற்படுத்துவதுதான்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x