

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் சாலையில் நடந்த சென்ற மூதாட்டியிடம் 9 சவரன் செயினை பறித்துவிட்டு கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இளைஞர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் சிக்கினார்.
நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் வசிப்பவர் ராஜன் (70) இவரது மனைவி விஜயலட்சுமி (64). இவர் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நங்கநல்லூர் ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார்.
அவர் தனியாக நடந்துச் செல்வதை கண்காணித்த இளைஞர் ஒருவர் அவர் பின்னே சென்று அவர் கழுத்திலிருந்த நகையை பறிக்க முயல அதை எதிர்த்து போராடும் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு செயினை பறித்துச் சென்றார். அவர் செயினை பறித்துக்கொண்டு ஓடவும், தயாராக இருந்த மோட்டார் சைக்கிள் அவர் அருகே வந்து நிற்கவுமதில் ஏறி அவர் தப்பித்துச் சென்றார்.
9 சவரன் செயினை பறிகொடுத்த மூதாட்டி கீழே விழுந்த காயத்துடன் எழுந்து அழுதபடி அங்குள்ளவர்களிடம் முறையிட்டார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பழவந்தாங்கல் போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் மேற்கண்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வந்தனர். வழிப்பறி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
ஏற்கெனவே சிசிடிவி காட்சியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் எண்ணை சேகரித்து அதன் உரிமையாளர் குறித்த விபரங்களை போலீஸார் எடுத்தனர். அந்த வாகனத்தின் உரிமையாளர் பழவந்தாங்கலைச் சேர்ந்த தினேஷ் என்பது தெரிய வந்ததை அடுத்து தினேஷை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தினேஷும் அவரது நண்பரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தினேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 9 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். செயினை பறித்த தினேஷின் நண்பர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.