Published : 04 Jan 2019 03:04 PM
Last Updated : 04 Jan 2019 03:04 PM

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்: டிடிவி தினகரன் அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளரை டிடிவி தினகரன் அறிவித்தார். முக்கிய கட்சிகளில் அமமுக முதன்முதலில் வேட்பாளரை அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் அங்கு மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் என்பதால் அவரை அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவித்தார்

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளரும் அவரே.

வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்ற கருணாநிதி கடந்த ஆகஸ்டு 8 அன்று காலமானதால், திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜன.28 அன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக, அதிமுக, அமமுகவுக்குள் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இங்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக திருவாரூர் கள நிலவரம் தெரிவிக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வாங்கிய வாக்குகளில் பாதி கூட பெறாத அதிமுக இப்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதால் வெற்றி இலகுவாக எங்களுக்கு கிடைத்துவிடும் என்று திமுகவினர் கருதுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை கணக்குப்படி இதை சரி என வைத்துக்கொண்டாலும், அதிமுக இரண்டாகப் பிளந்தும் திமுக அதிமுகவை அமமுக ஆர்.கே.நகரில் வென்ற முன்னுதாரணமும் உண்டு. ஆகவே கடைசி நேரப்பிரச்சாரம், கஜா புயல் உள்ளிட்ட பல அமசங்கள் தீர்மானிக்கப்போகும் இந்தத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக மூன்று கட்சிகளிடையே பலத்தபோட்டி நிலவுகிறது.

வேட்பாளரை அறிவிக்கும் விஷயத்தில் அமமுக தற்போது முந்தியுள்ளது. தேர்தல் வியூகத்திலும் டிடிவி முந்தியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அமமுக சார்பில் திருவாரூரில் டிடிவி ஒரு ரவுண்டு வந்துவிட்டார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கூத்தாநல்லூர், அத்திக்கடை பகுதிகளில் ஜமாத்தாருடன் கூட்டம் நடத்தி அங்குள்ள வாக்குகளை குறிவைத்து பேசியுள்ளார்.

திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் அமமுக வேட்பாளர் யார் என்பதில் கவனம் செலுத்திவரும் நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளரை முதலில் அறிவித்துள்ளார் டிடிவி. சசிகலாவுடன் ஆலோசனைக்குப்பின் தஞ்சையில் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார் டிடிவி.

திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் அங்கு மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் என்பதால் அவரை அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவித்தார். கடந்த முறை மன்னார்குடியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. திருவாரூர் மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் காமராஜ் திமுக அதிமுகவுக்கு சவால் விடும் வேட்பாளராக இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x