Published : 05 Jan 2019 03:27 PM
Last Updated : 05 Jan 2019 03:27 PM

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உயர் அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை? - பேரவையில் ஸ்டாலின் கேள்வி

அப்பாவி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மீது தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) திமுக தலைவரும்,எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் விவரம்:

"சாத்தூர் அரசு மருத்துவமனையிலேயே ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி. தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை அரங்கேறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் அந்த ரத்தத்தை கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில், விலைமதிக்க முடியாத ஒரு உயிர் பிரிந்திருக்கின்றது. ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கின்றது.

இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார். ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் மீது தான் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், சில பேர் அப்பாவிகள் இருக்கின்றார்கள். ஆனால், இதில் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் இதற்குக் காரணமாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?" என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

மேலும், "இந்தப் பிரச்சினை குறித்து விசாரிப்பதற்கு ஒரு கமிட்டி போடப்பட்டிருப்பதாக அமைச்சர் சொல்கிறார். கமிட்டி போடுவதென்பது, கிணத்திலே கல்லைப் போடுவதற்கு ஒப்பாக சொல்லுவது உண்டு. இது அரசினுடைய நிலையைப் பொறுத்து சொல்லுவது. எனவே, இது ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற காரணத்தால் ஒரு நாளைக் குறிப்பிட்டு இத்தனை நாட்களுக்குள் என ஒரு கால எல்லையை நிர்ணயித்தால் தான் ஒரு முறையான தீர்ப்பு கிடைக்கும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, பேரவை வளாகத்தில் அவை நடவடிக்கைகளை காண வந்த கோயம்புத்தூர் இன்ஃபன்ட் ஜீசஸ் பள்ளி மாணவ, மாணவிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x