

கிருஷ்ணகிரியில் நிதி நிறுவனம் நடத்திவரும், இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் அதிமுக கவுன்சிலர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி பாரதிநகர், முதல் தெருவில் வசித்து வருபவர் தங்கராஜ். மேல் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஓசாமாஸ் (32). அதிமுக நிர்வாகி. இருவரும் தனித்தனியாக நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கெனவே தொழில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தங்கராஜ் தரப்பில் 25-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன் (39), பிரபு (23), ராஜேஸ், லோகேஷ், வசந்த், ஜெகதீஸ், அப்பாஸ் (எ) முனிராஜ் மற்றும் ஓசாமாஸ் தரப்பில் அம்பி (எ) சக்திவேல் (24), பிரவின் (எ) பிரவின்குமார் (24), வினோத்குமார் (எ) வினோத் (31), விஜய் (31), கதிர், அசோக், கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தங்கராஜின் வீட்டுக்குள் புகுந்த ஓசாமாஸ் தரப்பினர் அங்கு இருந்த தங்கராஜனின் தாயார் விஜயா, பாட்டி செல்வி ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியதுடன், வீட்டில் இருந்தப் பொருட்கள், ஜன்னல் கண்ணாடிகள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதேபோல் ஓசாமாஸ் கடைக்குள் புகுந்த தங்கராஜ் மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட தரப்பினர், அங்கிருந்தவர்களைத் தாக்கியும், நிதிநிறுவனத்தில் இருந்த பொருட்கள், கார் உள்ளிட்ட வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், இருதரப்பும் சாலையில் ஒருவர் மீது ஒருவர் கல், பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இவற்றைப் பார்த்துஅதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசாரைக் கண்டதும் அனைவரும் தப்பிச்சென்றனர்.
8 பிரிவுகளில் வழக்கு
இது குறித்து விஜயா மற்றும் மற்றொரு தரப்பில் விஜய் ஆகியோர் கொடுத்த பரஸ்பர புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் தங்கவேல், கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் இரு தரப்பைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஓசாமாஸ், அம்பி, பிரவீன், வினோத்குமார், விஜய் மற்றும் சுரேஷ், கவுன்சிலர் வேல்முருகன், பிரபு ஆகிய 8 பேரை கைது செய்தனர். கார் உள்ளிட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள தங்கராஜ் உட்பட 9 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.