Published : 02 Jan 2019 02:41 PM
Last Updated : 02 Jan 2019 02:41 PM

பொங்கல் கொண்டாடும் நேரத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பது சரியல்ல: தம்பிதுரை பேட்டி

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சரியல்ல என அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 14 ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சரியல்ல என, தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பொங்கல் நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என குரல்கள் எழுந்ததன் காரணமாக அத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட பென்னாகரம் இடைத்தேர்தல் திமுக ஆட்சியிலேயே தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது 'கஜா' புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும், பொங்கல் பண்டிகை காலத்திலும் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. இது சரியல்ல. இது என்னுடைய சொந்தக் கருத்து" என தம்பிதுரை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x