

மெரினா கடற்கரையில் 6 மாத ஆண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கந்தன்சாவடியை சேர்ந்தவர் ரெஜினா. இவர் கணவருடன் சண்டை போட்டுவிட்டு தனது 6 மாத ஆண் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். நேற்று முன்தினம் மாலையில் மெரினா கடற்கரைக்கு வந்தவர் கடற்கரை முழுவதும் சுற்றிவிட்டு இரவில் மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ரெஜினாவிடம் பேச்சு கொடுத்தார். அந்த பெண்ணிடம் தனது சோகக் கதையை கூறிய ரெஜினா, குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை.
உடனே அங்கு ரோந்துவந்த போலீஸாரிடம் ரெஜினா புகார் தெரிவிக்க, இந்த தகவல் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காசிமேடு சிங்காரவேலன் நகரில் ஒரு பெண் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் விலை பேசிக்கொண்டு இருந்தார். இதுகுறித்து காசிமேடு போலீஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் விரைந்து சென்று விசாரித்தபோது, அது கடற்கரையில் கடத்தப்பட்ட ரெஜினாவின் குழந்தை என்பது தெரிந்தது.
விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் செல்வராணி (எ) ஆஷியாபேகம் (38) என்பதும், சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் என்பதும் தெரிந்தது.
அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் எதற்காக சென்னை வந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.