Published : 09 Jan 2019 12:16 PM
Last Updated : 09 Jan 2019 12:16 PM

பாமகவின் நாடக அரசியல்: பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை அன்புமணி எதிர்க்காதது ஏன்? - திருமாவளவன்

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவுக்கு பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எதிர்க்காதது ஏன் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் பாமக கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது. 

முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்தவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் மத்திய அரசின் முடிவை அவர் கண்டித்துள்ளார். அதைப் பார்த்ததும் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும் போது நிச்சயமாக அவர் அதை எதிர்த்துப் பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில் அந்த மசோதா மீது பாமக என்ன கருத்தைத் தெரிவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசாததன் மூலம் அந்த மசோதாவுக்கு மறைமுக ஆதரவு அளித்தது ஏன்? 

சமூக நீதியை வலியுறுத்தி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையிலும்கூட முரண்பாடு உள்ளது. இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கைதூக்கி விடுவதுதான் என அறிக்கையின் முற்பகுதியில் குறிப்பிட்டுள்ள அன்புமணி, அதே அறிக்கையின் இறுதியில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இட ஒதுக்கீடு பற்றி அவருக்குள்ள குழப்பத்தையே இது காட்டுகிறது. சமூக அடிப்படையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களைக் கைதூக்கிவிடுவதற்குத்தான் இட ஒதுக்கீடு என்னும் போது அந்த ஒடுக்குமுறையைச் செய்துவரும் முன்னேறிய சாதியினருக்கும் எவ்வாறு அதை வழங்க முடியும்? அப்படி முன்னேறிய சாதியினருக்கும் வழங்க வேண்டும் என்பதுதானே பாஜகவின் நிலைப்பாடு. அதற்கும் பாமகவுக்கும் என்ன வேறுபாடு? எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் ராமதாஸ் இந்தப் பிரச்சினையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்?

அன்புமணி விடுத்த அறிக்கையே போதுமென்று மவுனம் காக்கிறாரரா? எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மவுனத்துக்குக் காரணம்? உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறை இருந்திருந்தால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாஜகவின் மோசடியை எதிர்த்து பாமக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா?

அதைச் செய்யாமல் மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன் மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூக நீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த 'நாடக அரசியலை' பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x