

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ராமநாதபுரம் திருமுருகன், திருச்சி தங்கவேல் உட்பட பலர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கஜா புயல் நிவாரணத்துக்காக மத்திய அரசு ரூ.1146.12 கோடி ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. எந்த அடிப்படையில் கஜா புயல் நிவாரண நிதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.