Published : 05 Jan 2019 12:22 PM
Last Updated : 05 Jan 2019 12:22 PM

தோல்வி பயத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக ஜெயிக்கும் என்ற பயத்தில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை.  மக்கள் இயல்புநிலைக்கு திரும்பாத நிலையில், அங்கு தேர்தல் நடந்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனம் முழுவதும் தேர்தலில்தான் இருக்கும். எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார்.

டி.ராஜாவின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து ஓரிரு நாளில் அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

"தொகுதியின் நிலைமை குறித்து அறிக்கை கேட்டுத்தான் தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்க வேண்டும். அப்படித்தான் அறிவித்திருப்பார்கள். அமமுக தான் இந்த தேர்தலிலும் ஜெயிக்கும், என மற்ற கட்சிகள் நினைக்கின்றனர். மக்களின் எழுச்சி தெரிகிறது. அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தான் ஜெயிப்பார் என்ற பயத்தில் மற்ற கட்சிகள் உள்ளன.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணியில் இருக்கிறது? திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை பேச வைத்தது யார் என தெரியும்.

மீதம் உள்ள 18 தொகுதிகளில் எப்படி இப்போது இடைத்தேர்தல் வரும்? 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இம்மாதம் 25 ஆம் தேதி வரை உள்ள நிலையில், எப்படி தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கும்? திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் தொடுத்த வழக்கு உள்ளது. அப்படியிருக்கையில் அங்கும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது. அந்த வழக்கை திமுக வாபஸ் பெற்றிருந்தால் அங்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்.

ஆளும்கட்சி எப்படி பயப்படுகிறதோ அப்படி பிரதான எதிர்கட்சியான திமுக நீதிமன்றம் வாயிலாக தேர்தலை நிறுத்த பார்க்கிறது.

திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த சொல்லி உச்ச நீதிமன்றத்தில் திமுக மூலமாகத்தான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பயப்படுகிறது. தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியாக கூட இது இருக்கலாம். திருவாரூரில் தேர்தல் நடக்கும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், "திருவாரூரில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. ஆர்.கே.நகரில் எங்களுக்கு யார் போட்டி?

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லா கட்சிகளும் புது கட்சிகள் தான். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். சுயநலத்திற்காக சாணக்கிய தனம் செய்யாத தலைமை, ஜெயலலிதா போன்ற தைரியமான தலைமை வேண்டும் என விரும்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கே வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர்" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x