Last Updated : 19 Jan, 2019 10:57 AM

 

Published : 19 Jan 2019 10:57 AM
Last Updated : 19 Jan 2019 10:57 AM

பணி மாறுவதற்கு இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு; அங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21-ம் தேதி தொடங்குவதில் சிக்கல்: போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்

அங்கன்வாடி மையங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவதை இடைநிலை ஆசிரியர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் திட்டமிட்டபடி மழலையர் வகுப்புகள் தொடங்குவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் இயங்கும் 2,380 அங்கன்வாடி மையங்களில் ரூ.7.73 கோடியில் மழலையர் வகுப்புகள் வரும் 21-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இதற்கான இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அங்கன்வாடிகளில் 3-4 வயது குழந்தைகள் எல்கேஜி, 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். மழலையர் வகுப்புக்கான பாடத்திட்டம் தயாராகிவிட்ட நிலையில், புத்தகம் அச்சிடுவதற்கான பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. மேலும், குழந்தைகளுக்கு பாடம் நடத்த அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவும் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர் ராமநாதன்: கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தையைதான் பள்ளியில் சேர்க்க வேண்டும். இதனால்தான் மத்திய அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் இந்த சட்டத்தை மீறி மழலையர் வகுப்புகள் தொடங்க அரசு திட்டமிட்டுஉள்ளது.

தவிர, தனியார் கல்வி நிறுவனங்கள் மழலையர் வகுப்புகள் தொடங்க 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 15 சதுர அடி வகுப்பறை, சிசிடிவி கேமரா, கழிப்பிட வசதி என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை பூர்த்தி செய்யாத கல்வி நிறுவனங்களுக்கு அரசு உரிமம் தருவதில்லை. இந்த சூழலில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்குவது ஏற்புடையது அல்ல.

இன்னும் பாடப்புத்தகம்கூட அச்சிடப்படாத நிலையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எனவே, இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, மறு ஆய்வு செய்து போதிய கட்டமைப்பு வசதிகளுடன் மழலையர் வகுப்புகளை அரசு தொடங்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் தாஸ்: மழலையர் வகுப்புகளுக்கு, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே அந்த திட்டத்துக்கு பலன் கிடைக்கும். மாறாக, சிக்கனம் என்ற பெயரில் போதிய நிதி ஒதுக்காமல் புதிய திட்டத்தை தொடங்கினால், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதுபோல, தோல்வியில்தான் முடியும். இதை எதிர்த்து ஜாக்டோ ஜியோ சார்பில் வரும் 22-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

தகுதி இறக்கம்?இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட்: இத்திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்த அரசு முயல்கிறது. ஏற்கெனவே 70 சதவீத ஆரம்பப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன. விதிகளின்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள். இந்த சூழலில் இடைநிலை ஆசிரியரை தகுதி இறக்கம் செய்வதுபோல, மழலையர் வகுப்புக்கு பாடம் எடுக்க நிர்பந்தம் செய்வது கண்டிக்கத்தக்கது.

பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை உபரி ஆசிரியர்கள் மூலம் நிரப்பாமல் அவர்களை வேறு துறைக்கு பணிமாறுதல் செய்வதை ஏற்க முடியாது. இதை எதிர்த்து ஆசிரியர்களை ஒன்றுதிரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பணி மாற்றத்துக்கு எதிர்ப்புஇதற்கிடையே, பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு பணி மாற்றம் செய்வதை இடைநிலை ஆசிரியர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். அவர்களது சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் உபரி இடங்களும் குறைவாகவே உள்ளன. இதனால் திட்டமிட்டபடி மழலையர் வகுப்புகள் தொடங்குவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு மாற்றி வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x