

மரக்காணத்தில் கருத்தடை செய்வதற்காக பிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நாய்கள் கொன்று புதைக்கப்பட்டதாக பேரூராட்சித்தலைவர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் அருகே மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட தீர்த்தவாரி என்ற இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15ம் தேதி கருத்தடை செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றனர்.
இந்த நிலையில் தீர்த்தவாரியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் துர்நாற்றம் வீசியது. கருத்தடைக்காக பிடித்து செல்லப்பட்ட நாய்கள் கொல்லப்பட்டு அவற்றை அங்கு புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக மரக் காணத்தை சேர்ந்த சையத் அமித் என்பவர் சென்னையில் உள்ள புளுகிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு புளுகிராஸ் அமைப்பின் பொதுமேலாளர் டான் வில்லியம்ஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மரக்காணம் தீர்த்தவாரி பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
9 இடங்களை தோண்டி பார்த்தனர். அப்போது 200க்கும் மேற்பட்ட நாய்கள் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. நாய்களின் உடல்களை தோண்டி வெளியே எடுத்தனர். அவற்றில் சில உடல்களை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக புளுகிராஸ் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் மரக்காணம் போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் மரக்காணம் பேரூராட்சித்தலைவர் சேகர் உட்பட 10 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.