Published : 31 Jan 2019 08:35 PM
Last Updated : 31 Jan 2019 08:35 PM

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடைகேட்டு தொடரப்பட்ட வழக்கில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்றபின் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், சங்க நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் மற்றும் பொது குழு நடத்த கோரியும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் தயாரிப்பாளர்கள் ஜெ. சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க நிதியில் முறைகேடு செய்திருப்பதாவும், பொதுகுழு உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் ஓய்வூதிய தொகையை 12 ஆயிரமாக உயர்த்தியுள்ளதாகவும், ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டிய பின் வழங்கப்படும் என விஷால் கூறும் நிலையில் இளையராஜாவுக்கு ஏன் 3.5 கோடி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தயாரிப்பாளர் சங்க நிதி குறித்து ஒரு ஆவணத்தைக்  கூட நடிகர் விஷால் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.  புக் மை ஷோ மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதுதொடர்பான ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

ரூ.7 கோடி நிதி திரட்டுவதாக கூறியுள்ளனர். இது நஷ்டத்தில் தான் முடியும். பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகை எனக் கூறப்படவில்லை.  அதனால் அனைத்தையும் மேற்பார்வையிட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

விஷால் தரப்பில், ’இளையராஜா-75’ நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நிதி திரட்டுவதற்காக இளையராஜா நிகழ்ச்சி நடத்த 2016-லேயே முடிவு செய்யப்பட்டது.

2017-18 கணக்கு வழக்குகள் நடக்க இருக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து தான் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கப்பட்டது.  ஒய்.எம்.சி.ஏ.க்கு 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு 25 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி தேர்தல் மாற்றுப் பொதுக்குழு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்க கோரிய பிரதான வழக்கு பின்னர் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு, ‘இளையராஜா-75’ நிகழ்ச்சிக்கு தடை கோரிய இடைக்கால கோரிக்கையை நிராகரித்து தடைவிதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவில் கணக்கு வழக்குகளை மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் வரை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தடைகோரும் மனுவில் உரிய ஆதாரங்கள் இல்லாமல் கடைசி நேரத்தில் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இளையராஜ 75 நிகழ்ச்சி எவ்வித இடையூறுமின்றி குறித்த தேதியில் நடக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x