

அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரில் 16 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, முதல் கட்டமாக 5 பேரிடம் விசாரனை நடத்தப்பட்டு அதன்பேரில் நடைபெற்ற தொடர் விசாரணையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பணிபுரியும் ரவிக்குமார், சுரேஷ், ராஜசேகர், எர்ரல் பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, ராஜா, தீணதயாளன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் மகளிர் நீதிமன்றத்தில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பர் 5-ம் தேதி அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தங்கள் மீதான குண்டர் சட்டம் உரிய வரன்முறை படி பதிவு செய்யப்படவில்லை, குண்டர் தடுப்பு சட்டத்தின் படி 30 நாட்களுக்குள் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், 40 நாட்களுக்கு பிறகே தங்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என தீனதாயாளனை தவிர்த்து 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள், சி.டி. செல்வம், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய காலதாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது காலதாமதமாக குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு 16 பேர் மீதான குண்டர் தடுப்பு காவல் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.