Published : 06 Jan 2019 10:26 AM
Last Updated : 06 Jan 2019 10:26 AM

பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் முந்திரி, திராட்சை, ஏலக்காயை காகிதத்தில் பொட்டலமிட வேண்டும்: கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவாளர் உத்தரவு

நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை காகித உறையில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும் என்று அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அதன் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு சார்பில் கடந்த 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள பொங்கல் சிறப்புப் பரிசுத்தொகுப்பிலும் பிளாஸ்டிக் இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதனால் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டு கண்டிப்பாக பொட்டலமிடக்கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர், நியாயவிலைக் கடைகளை நடத்தி வரும் கூட்டுறவுசங்கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முந்திரி, உலர் திராட்சை ஆகியவை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் கொண்ட பொட்டலங்களாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பொட்டலமிடும்போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அந்த பொட்டலங்களை பழுப்பு நிற உறைகளைக் கொண்டு மட்டுமேதயாரித்து விநியோகம் செய்யப்படுவதை அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றி பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் காகிதத்தில் பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் கூட்டுறவு சங்கமும், தங்கள் நியாயவிலைக் கடைகளுக் கான பொட்டலங்களை காகிதத்திலேயே தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக டியூசிஎஸ் மேலாண் இயக்குநர் அகோ.சந்திரசேகர் கூறும்போது, “இச்சங்கம் சார்பில் 262 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 2 லட்சத்து 81 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள், உணவுபொருட்களை வாங்கி வருகின்றனர். இவர்களுக்கான பொங்கல்பரிசுத் தொகுப்புகளை பொட்டலமிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் பிளாஸ்டிக் தடைஉத்தரவை செயல்படுத்தும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் முந்திரி, உலர்திராட்சை போன்றவற்றை பிளாஸ்டிக் உறைகளுக்கு பதிலாக காகிதஉறைகளை பயன்படுத்தி பொட்டலமிட்டு வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x