Published : 24 Jan 2019 05:03 PM
Last Updated : 24 Jan 2019 05:03 PM

நான் திமுகவின் அறங்காவலர் என்பதை  நிரூபிக்க முடிந்தால் பாஜகவில் இணைந்து விடுகிறேன்: பாஜக நிர்வாகிக்கு உதயநிதி பதிலடி

நான் திமுகவின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் இணைந்து விடுகிறேன். இருப்பதிலேயே கொடுமையான தண்டனை அதுதான் என்று தன் ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகளும் கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். தற்போது அவரை அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் நியமனம் குறித்து, 'குடும்ப அரசியல்' என்று பாஜகவினர் கடுமையாக சாடி வருகிறார்கள். இது தொடர்பாக பாஜக தலைவர்களின் மகன் என்னென்ன பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தமிழக பாஜகவில் இருக்கும் சுரேஷ் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரைக் குறிப்பிட்டு 'இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்று திருமாறன் என்ற நெட்டிசன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சூர்யா, "இந்தப் பட்டியலில் வாரிசு எங்கேயும் இல்லை. அவர்கள் அனைவருமே கட்சியின் தலைவர்கள் அல்ல. அமைச்சர்கள், எம்.பிக்கள். கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் சோனியா காந்தி குடும்பத்தினர் கட்சியையே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது" என்று தெரிவித்தார்.

"வாரிசு அரசியலுக்குப் புது விளக்கமா" என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சூர்யா, "எண்ணற்ற கோடிகளை வைத்திருக்கும் திமுகவின் அறக்கட்டளைகளுக்கு அறங்காவலராக உதயநிதி நியமிக்கப்பட்டத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு இது புதிதாகத் தான் இருக்கும். அடுத்து இன்பநிதியின் நியமனத்தையும் நியாயப்படுத்த தயாராகுங்கள். அப்போதும் அதை டாக்டர் தமிழிசை அல்லது நிர்மலா சீதாராமனுடன் ஒப்பிடலாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.

— SG Suryah (@SuryahSG) January 24, 2019

பலரும் இந்த ட்வீட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று அவரது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டார்கள். சூர்யாவின் கருத்துக்கு பதிலடியாக உதயநிதி ஸ்டாலின் "நான் திமுகவின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் இணைந்து விடுகிறேன். இருப்பதிலேயே கொடுமையான தண்டனை அதுதான்" என்று தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x