Published : 24 Jan 2019 02:22 PM
Last Updated : 24 Jan 2019 02:22 PM

மோடியுடன் எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்பும் இரண்டு கடமைகள் உள்ளன: ஸ்டாலின்

வரவிருக்கின்ற தேர்தலில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு வேலை தான், அது மோடியை வீட்டுக்கு அனுப்புவது, நமக்கு இரண்டு வேலைகள் காத்திருக்கின்றன. மோடியோடு சேர்த்து எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம் காப்போம்' என்கிற தலைப்பில் திருச்சியில் இன்று நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

''தேசம் காப்போம் என்ற தலைப்பில் சனாதனத்தை வேரறுப்போம் , புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்று இந்த மாநாட்டிற்கு திருமாவளவன் ஒரு முழக்கத்தை வடிவமைத்துத் தந்திருக்கின்றார். எப்போதுமே அவருடைய முழக்கங்கள் கூர்மையானதாகத் தான் இருக்கும்.

நடக்க இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலே சனாதனத்துக்கும் - ஜனநாயகத்துக்குமான தேர்தல். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கக்கூடிய யுத்தமே சனாதனத்துக்கும் ஜனநாயகத்துக்குமான யுத்தம் என்பதை நாம் மறந்து விடமுடியாது.

ஜோதி ராவ் பூலேவும், அம்பேத்கரும் மகாராஷ்டிராவிலும்  அயோத்திதாச பண்டிதரும், தந்தை பெரியாரும் தமிழகத்திலும் சனாதனத்துக்கு எதிராக சமூக சீர்திருத்தப் போராட்டமாக நடத்தியதைத் தான் இன்றைக்கு நாம் ஜனநாயகப் போராட்டமாக நம்முடைய திருமாவளவனின் சீரிய முயற்சியோடு நடத்தக்கூடிய கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கின்றது.

அம்பேத்கர், தந்தை பெரியார் காலத்தில் சனாதன சக்திகள் ஆட்சியில் இல்லை. ஆனால் இன்று ஆட்சிக்கே வந்து விட்டார்கள். எனவே தான் நாம் இன்னும் கூர்மையாகப் போராட வேண்டும். அதனால் தான் இந்த மாநாட்டைக் கூட்டி இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, மிகுந்த அக்கறையோடு, ஆதங்கத்தோடு இதை அவர் ஏற்பாடு செய்திருக்கின்றார்.

‘தேசம் காப்போம்’ என்று இந்த மாநாட்டிற்கு ஒரு உன்னதமான தலைப்பை தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியிருக்கின்றார். ‘தேசம் காப்போம்’ என்ற முழக்கம் ஏன் எழ வேண்டும்? தேசத்துக்கு, இந்த நாட்டுக்கு அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்துவிட்டதா? பாகிஸ்தான் படையெடுத்து வரப் போகிறதா? சீனா நம் மீது போர் தொடுக்கப் போகிறதா? என்ன அச்சம் திருமாவளவனுக்கு வந்திருக்கின்றது? மேடையில் உட்கார்ந்திருக்கிற தலைவர்களுக்கு என்ன அச்சம் வந்திருக்கின்றது?

பாகிஸ்தானாலோ, சீனாவினாலோ இந்த தேசத்துக்கு ஆபத்து வரவில்லை. தேசத்தை யார் ஆள்கிறார்களோ அவர்களால் தான் இந்த தேசத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. அதனால் தான் ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பை ன நம்முடைய எழுச்சித் தலைவர் இன்றைக்கு தேர்ந்தெடுத்து இதை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

கொல்கத்தா மாநாட்டில் மேடையில் பேசிய அனைவரும் முழக்கமிட்டது ஒன்றே ஒன்று தான். ‘நரேந்திர மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்’ என்ற அந்த முழக்கம் தான். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் தான் மே மாதம் நடக்க இருக்கக்கூடிய ஜனநாயகப் போர்க்களம்.

ஒரு அரசாங்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். "நீதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைச் சீர்திருத்த அஞ்சாத அரசாங்கமே அவசரத் தேவை"  என்று சொல்லியிருக்கின்றார்.

மோடிக்கும், நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டும் என்று சொன்னால் சமீபத்தில் அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய பொருளாதார இட ஒதுக்கீடு. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு, சலுகைகள் தரட்டும். அதை நான் தடுக்கவில்லை. அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை.

ஆனால், அதே நேரத்தில் சமூக நீதியான இட ஒதுக்கீட்டுக்குள் அதனைக் கொண்டுவந்து சமூக நீதித் தத்துவத்தை குழி தோண்டுவது தான் மோடியினுடைய மனு நீதி. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களில் முற்பட்ட வகுப்பினர் என்றால், பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லையா?

ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் என்றால் மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கக்கூடியவர்கள் ஏழையா? இப்படிச் சொல்வதன் மூலமாக உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்திருக்கின்றார். ஏழைத் தாயினுடைய மகன் என்று அடிக்கடி மோடி சொல்கின்றார். இது ஏழைத் தாயின் மகன் செய்யக்கூடிய வேலையா?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ‘நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று சொல்லி வந்தார். இதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் செய்கின்ற காரியமா? ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இன்னொன்றையும் மோடி சொன்னார்.நான் ‘டாக்டர் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றப் போகிறேன்’ என்று, இதைவிட அம்பேத்கருக்கு அவமானம் தேடித்தரவேண்டிய வேறு காரியம் ஏதேனும் உண்டா? நான் கேட்கின்றேன்.

திமுக அரசு கருணாநிதி தலைமையில் ஆட்சி நடத்திய நேரத்தில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களுக்கு சமூக நீதி சமவாய்ப்பை தொடர்ந்து வழங்கியது.

1.  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அருந்ததியர் உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு கொடுத்து உயர்த்திய ஆட்சிதான் கருணாநிதி தலைமையில் இருந்தது என்பதை யாரும் மறுத்திட,மறைத்திட முடியாது.

2.  பிரிட்டிஷ் காலத்து பாரம்பரியம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய ஒருவரை நீதிபதியாக நியமித்து அழகு பார்த்தது திமுக.

3.  சட்டத்தை சனாதனப் போர்வையால் பூச முயற்சித்தவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்த அரசு திமுக அரசு.

4.  அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அவர் பெயரை மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்க பலத்த எதிர்ப்பு கிளம்பிய நேரத்தில், டாக்டர் அம்பேத்கர் பெயரை சென்னை சட்டக் கல்லூரிக்கு சூட்டி மகிழ்ந்த ஆட்சி திமுக ஆட்சி.

5.   சமத்துவ புரங்களை அமைத்தது.

6.   தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கண்டது.

7.   பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென தனித்துறை அமைத்தது.

8.   இரண்டு பெண் மேயர்கள். அந்த இரண்டு பெண் மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரை நியமிக்க வேண்டும் என்ற அந்த விதிமுறையை வகுத்துத் தந்தது.

9.   சமூக சீர்திருத்த தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது என்று இன்றைக்கு சிலர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் நான் இன்றைக்கு இந்தப் பட்டியலை எடுத்துச் சொல்லவேண்டிய அவசியத்திற்கு வந்தேன்.

ஒரு அரசாங்கம் என்பது நீதிக்கான அரசாங்கமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். அத்தகைய நீதிக்கான அரசாங்கமாகத் தலைவர் கருணாநிதி தலைமையில் இருந்த திமுக அரசு விளங்கியது. அநீதியான அரசாங்கத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மோடி அரசாங்கம்.

தேசத்தையே 41 சதவீதத்துக்கு விற்கக்கூடிய அரசாங்கம் தான் இந்த மோடி அரசாங்கம். எனவே, இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 41 சதவீதம் அல்ல 100 சதவீதத்தையும் விற்றுத் தீர்த்து விடுவார்கள்.  அந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த சூதாட்டத்தை நாம் தடுத்தாக வேண்டும் என்பதற்காகத் தான் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் ஒன்று கூடின. இன்றைக்கு தமிழ்நாட்டில் நம்முடைய எழுச்சித் தலைவரின் சீறிய முயற்சியோடு இங்கே கூடியிருக்கின்றோம்.

மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேலை தான் உண்டு. அந்த ஒரு வேலை எதுவென்று கேட்டால் மோடியை வீழ்த்துவது ஒன்று தான். ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் இரண்டு வேலை வந்திருக்கின்றது. எடப்பாடியையும் சேர்த்து வீழ்த்த வேண்டிய வேலை நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. எடப்பாடி ஏற்கெனவே, தமிழ்நாட்டை 100 சதவீதம் விற்றுவிட்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக வந்தாலும், பேசி வைத்துக்கொண்டு தனித்தனியாக வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களை வீழ்த்துவதற்கு தயாராவோம்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x