Published : 29 Jan 2019 02:57 PM
Last Updated : 29 Jan 2019 02:57 PM

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு நிலுவையில் உள்ள 21 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஒருவார காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இறுதிக்கெடு விதித்தது. அவ்வாறு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும், அதற்குப் பின்னரும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று 90%-க்கும் மேலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்தது. எனினும், சில ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிகளுக்கு வராத தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 225 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆசிரியர்களின் பணியிடங்கள், காலியானதாக  அறிவிக்கப்பட்டு, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x