

மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை எவ்விதக் காலதாமதமும் இன்றி அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித் துறைச் செயலாளர் உடனடியாக விடுவிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள் தமிழக அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது.
உயர்கல்வித்துறையின் செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்பிறகும் இருவருமே இந்த நிமிடம் வரை பதவியில் நீடித்துக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும்,இந்த இருவரையும் நியமனம் செய்த முதல்வரும் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், உயர்கல்வித்துறை செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்காமல் ஒன்றுமே நடக்காததைப்போல வேடிக்கை பார்ப்பதும், முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரை நியமித்த ஆளுநரும் பொறுமையுடன் அமைதி காப்பதும், அரசியல் சட்டம் அதிமுக ஆட்சியில் பலவீனப்படுத்தப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
திறமை மிக்க தலைமையின் கீழ் முதல்வர் இந்த அரசை வழி நடத்தி வருகிறார் என்று ஆளுநர் தமிழக சட்டப்பேரவையில் அரசாங்கத்தின் செயற்கையான உரையை வாசித்து அதன் ஈரம் காய்வதற்குள் வெளிவந்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பும் அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் அருவருப்பான வெட்கக்கேடான அலங்கோலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
குட்கா ஊழலில் சம்மன் அனுப்பி விசாரித்தாலும் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய மாட்டேன், டிஜிபி வீட்டிலேயே சிபிஐ ரெய்டு நடத்தினாலும் டிஜிபியை பதவியில் வைத்துப் பாதுகாப்பேன் என்பது முதல்வர் பழனிசாமியின் அதிகாரத் துஷ்பிரயோக மனப்பான்மை.
தார்மீகப் பொறுப்பற்ற செயல், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சந்தி சிரித்தால் நமக்கென்ன என்று அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆளுநரின் பாராமுக நிலைப்பாடும், தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடுகளை ஏற்படுத்தியிருப்பதுடன், மாநில அரசின் நிர்வாக இயந்திரம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நிலைகுலைந்து, தோல்வியின் உச்சி முகட்டிற்குச் சென்று விட்ட அவலத்தை அரங்கேற்றியுள்ளது.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பதவியேற்றுக் கொண்ட முதல்வரும், அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆளுநரும் தங்களது தலையாய கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து அரசியல் சட்டத்தை தமிழகத் தெருக்களில் அனாதையாக அலைய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி எவ்விதக் காலதாமதமும் இன்றி அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். தகுதியை இழந்த ஒருவர் இனி பதவியில் தொடருவது அமைச்சரவைக்கே அவமானம் மட்டுமல்ல, தமிழகத்தின் மீது பூசப்படும் அசிங்கம்.
உயர் நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித் துறைச் செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிப்பது ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கல்வித்துறைக்கு பேரிழுக்கு என்பதால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவற்றை செய்யத் தவறினால், ஆளுநர் தலையிட்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சிபிஐ முன்பு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், சிபிஐ ரெய்டுக்குள்ளான டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உள்பட அத்தனை பேரையும் நீக்கி, தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கும் மாநில அரசு நிர்வாகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
மக்களாட்சி மாண்பின் சிகரமாகத் திகழ வேண்டிய அமைச்சரவையின் புனிதத்தையும் காப்பாற்ற வேண்டும்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.