Published : 27 Jan 2019 08:26 AM
Last Updated : 27 Jan 2019 08:26 AM

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த பெண்கள் வலியுறுத்த வேண்டும்: கடலூர் கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த பெண்கள் வலியுறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன் நேற்று குனமங்க லம் மற்றும் அழகிய நத்தம் கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டார்.

அப்போது கிராம மக்கள் மத்தியில் அவர் பேசியது: நாம் செய்ய வேண்டிய கடமைகளில் சிலவற்றில் தவறிவிட்டோம். நானும் அதில் அடக்கம். இப்போது அதை செய்யலாம் என்று உங்களை நாடி வந்துள்ளேன்.

அடமானம் வைக்காதீர்கள்

கிராம சபை கூட்டத்தில் நாம் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகளைச் செய்யாமல் 25 ஆண்டு காலமாக விட்டுவிட்டோம். கிராம சபை என்ற ஆயுதத்தை பயன்படுத்தாமல் பூஜை செய்து வந்துள்ளோம். இது நல்லதல்ல. நான் இப்படி பேசுவதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய இடம் கிராம பஞ்சாயத்து.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் ரூ.10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் கொடுப்பார்கள். அதை வாங்கி விட்டால் 5 ஆண்டுகளுக்கு உங்களை அடமானம் வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அவர்களிடம் நீங்கள் எதையும் கேட்க முடியாது.

உரிமையும் கடமையும்

கஜா புயலுக்கு மத்திய அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால் பொங்கல் பரிசாக கொடுக்க ரூ 2 ஆயிரம் கோடி அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதை நீங்கள்தான் கேட்க வேண்டும்.

கணக்கு கேட்பது உங்கள் உரிமை; பதில் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை. கணக்கு கேட்பது என்பது சேமிப்பின் அடித்தளம்.

கிராமசபை கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் என்ன, குளம் எப்போது வெட்டப் போகிறோம், கிராமத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்று தைரியமாக கேள்வி கேட்க வேண்டும்.

மகளிர் குரல்

உள்ளாட்சித் தேர்தலை அரசு உடனே நடத்த வேண்டும். அதை நடத்தினால்தான் கிராமங்கள் முன்னேறும். அப்போது அரசின் பல திட்டங்கள் கிராமங்களுக்கு கிடைக்கும்.

கிராம சபை கூட்ட தீர் மானங்களை நிறைவேற்றி செயல்படுத்த முடியும், ஆனால் இந்த அரசு எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாக உள்ளது.

இரு விஷயங்களை பெண்கள் செய்ய வேண்டும்.. ஒன்று தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; இரண்டாவது, வருடத்தில் 4 முறை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x