Last Updated : 21 Jan, 2019 07:57 AM

 

Published : 21 Jan 2019 07:57 AM
Last Updated : 21 Jan 2019 07:57 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு உலக சாதனை: 1,353 காளைகள் பங்கேற்றதையடுத்து அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 1,353 காளைகள் பங்கேற்றன. இதையடுத்து இந்த ஜல்லிக்கட்டு உலக சாதனையில் இடம் பிடித்தது.

விராலிமலை அம்மன் குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி நேற்று காலை 8 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் பிறந்ததும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா தமிழகத்தில் தொடங்கியுள்ளது. தமிழக வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் விழாவாக ஜல்லிக்கட்டு அமைந்துள்ளது. காலம்காலமாக ஜல்லிக்கட்டுக்கு புகழ் சேர்க்கின்ற அலங்காநல்லூர், அவனியாபுரம்,பாலமேடு ஆகிய ஊர்களுக்கு இணையாக இப்போது விராலிமலையும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழர்கள் வீரம் மிக்கவர்கள் என்பதை ஜல்லிக்கட்டின் வாயிலாக அறிய முடிகிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் இங்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. நானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி என்.நடராஜன், ஜி.பாஸ்கரன், எஸ்.வளர்மதி, வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தலா ஒரு காளை மாடு பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு தொடங்கியதும் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோரின் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க இளைஞர்கள் தீவிரம் காட்டினர். சில காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளைப் பெற்றனர். அதேநேரத்தில், பல காளைகள் சீறிப் பாய்ந்தும் வட்டமடித்தும் வீரர்களை தெறிக்க விட்டன. அடக்க முயன்ற வீரர்களை நெருங்க விடாமல் காளைகள் மிரட்டியது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், பீரோ, கட்டில், சைக்கிள், தங்கக் காசு, வெள்ளிக் காசு, அயர்ன் பாக்ஸ், குத்துவிளக்கு உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மருத்துவ முகாம்

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, அதே பகுதியில் 40 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. காளைகள் முட்டியும், நெரிசலில் சிக்கியும் காயமடைந்தவர்களுக்கு இந்த முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவோர் திருச்சி, விராலிமலை, மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல, காயமடைந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். தமிழக சுற்றுலாத் துறை ஏற்பாட்டின்பேரில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40 பேரும் போட்டியை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் திருச்சி மண்டல ஐஜி வரதராஜூ தலைமையில் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சேலம், மதுரை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,353 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்துவிடப்படாத 200 காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்தக் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் பரிசு அளிக்கப்பட்டது.

உலக சாதனைக் குழு

விராலிமலை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்கு அதிக காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இதை உலக சாதனையாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, போட்டியை மதிப்பிடுவதற்காக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க், மெலினா ஆகியோரைக் கொண்ட உலக சாதனைக்கான குழு வந்திருந்தது. இந்தக் குழு ஜல்லிக்கட்டை கண்காணித்தது. விராலிமலையைப் போன்று வேறெங்கும் இதுவரை 1,353 காளைகள் பங்கேற்காததால் இதை உலக சாதனையாக அந்தக் குழு அறிவித்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும் அங்கு திரண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2 பேர் உயிரிழப்பு

போட்டியின்போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு(25), திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் பகுதியைச் சேர்ந்த எல்.சதீஷ்குமார் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் காளைகள் முட்டியதில் 43 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 13 பேர்விராலிமலை, திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல்வர் பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உரிமையாளரின் பிடியில் இருந்து தப்பி வந்த ஒரு காளையைக் கண்டு மிரண்டு ஓட முயன்றபோது தவறி விழுந்து போலீஸார், பார்வையாளர்கள் என 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு அமைக்கப்பட்ட 2 மேடைகளுக்கும் படிகள் அமைக்கப்படாததால் ஏறி, இறங்க சிரமப்பட்டனர்.

21 காளைகளை அடக்கிய திருச்சி வீரர்

விராலிமலை ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று, சிறந்த காளையாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ராப்பூசலைச் சேர்ந்த பி.முருகானந்தம் என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டது. இருவரையும் பாராட்டி தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பரிசை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x