Last Updated : 29 Sep, 2014 10:27 AM

 

Published : 29 Sep 2014 10:27 AM
Last Updated : 29 Sep 2014 10:27 AM

இன்று உலக இதய தினம்: வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் பாதிக்கும் நோய்

இதயநோய் தற்போது வயதானவர்களை மட்டுமின்றி இளைஞர் களையும் அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், அப்பல்லோ மருத்துவமனை இதய மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பால் ரமேஷ் தங்கராஜ் ஆகியோர் கூறியதாவது:

இந்த ஆண்டில் உலக இதய தினத்தின் கருப்பொருள் ‘இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்குவோம்’ என்பதாகும். வீடு, விளையாடும் இடம், பணிபுரியும் அலுவலகம் போன்ற வற்றில் இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். உலக அளவில் இதய நோய் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மாரடைப்பு ஏற்படும் 100 பேரில் 20 பேர் உயிரிழக்கின் றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50, 60 வயதுகளில் வந்த இதய நோய், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவை இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இவை தவிர இதய ரத்தக் குழாய்கள் சுருங்குதல் மற்றும் வீங்குதல், இதய தசைகள் செயலிழத்தல், இதயம் செயலிழந்து போதல், இதய துடிப்புகளில் பிரச்சினை போன்ற இதய நோய்களும் உள்ளன. இதய நோய்களால் பாதிக்கப்படும் 80 சதவீதம் பேரை மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியும். 20 சதவீதம் பேருக்குத்தான் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதய நோய்களுக்கு பல நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்

இதய நோய்களில் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உள்ளது. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல், மூச்சுத் திணறல், மயக்கம், உடல் வலி, சோர்வு போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். மாரடைப்புக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது திடீரென மாரடைப்பு வந்து வந்து விட்டாலோ உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரையை போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

இதய நோய்களை தவிர்க்க...

மது, புகை பழக்கத்தை விட்டு சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். உணவுடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிறு நிறைய சாப்பிடுவதை விட்டுவிட்டு குறைவாக சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே இதய நோய்கள் வராமல் 80 சதவீதம் தடுக்கமுடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x