Published : 30 Jan 2019 11:27 AM
Last Updated : 30 Jan 2019 11:27 AM

வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளம் தள்ளிப்போகிறது

வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற அரசு உத்தர வால், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தள்ளிப்போகிறது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வேலை நிறுத்தத்தை ஜன.22-ம் தேதி தொடங்கினர். வேலை நிறுத்தத்தை அறிவித்தபோதே, தமிழக தலைமைச் செயலர், அதனத்து துறை செயலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி னார். அதில், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில், பணிக்கு வராத நாட்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என்றும் ஒரு வேளை மருத்துவ விடுப்பு எடுத்திருந்தால், ‘மருத்துவர்கள் குழு’வுக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். மேலும், மாத ஊதியத்துக்கான சம்பள கணக்கு பட்டியல் கருவூலத்துறைக்கு அனுப்பப் பட்டால், பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் கருவூலத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி யிருந்தார்.

இதன்படி, ஜன.22-ம் தேதி முதல் பணிக்கு வராதவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அந்தந்த துறைத்தலைவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும், பல துறைகளில் சம்பள கணக்கு பட்டியல் பணிக்கு வராத நாட்களை கணக்கிடாமலேயே கருவூலத்துக்கு அனுப்பப்பட் டுள்ளது.

இது தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பள கணக்கு பட்டியலை திரும்ப பெறும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராத நாட்களை கணக்கிட்டு, அவற்றை குறைத்து பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், வழக்கமாக ஜன.31-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரவேண்டிய சம்பளம் இந்த மாதம் சற்று தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x