மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்: மதுரையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்: மதுரையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு

Published on

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்கிறார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

பின்னர் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in