

உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகள் உள்பட பாஜக போட்டியிடும் இடங்களில் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் 3 மாநகராட்சி மேயர்கள், 8 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 189 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும், 1083 கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் வரும் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த தேர்தல்கள் நியாயமாக நடைபெறாது என்பதாலும், தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சியினர் அரங்கேற்றிவரும் அத்துமீறல்கள் அதை உறுதி செய்வதாலும் இடைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்புச் செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் உள்ளாட்சி இடைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரிக்க பாமக ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகள், கடலூர், விருத்தாசலம், குன்னூர், இராமநாதபுரம் உள்ளிட்ட நகராட்சிகள் உட்பட பாரதிய ஜனதா போட்டியிடும் இடங்களில் அக்கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.