Published : 24 Jan 2019 12:33 PM
Last Updated : 24 Jan 2019 12:33 PM

கோடநாடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி பதவி விலகக் கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவர் உடனடியாக பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும்; தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி, ஜனவரி 24 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆளுநர் மாளிகை எதிரில் இன்று (வியாழக்கிழமை), சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்எல்ஏ - சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ - சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு,  எம்எல்ஏ -  சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோடநாடு கொலை - கொள்ளை தொடர்பான வழக்குகளில் முதல்வர் பதவி விலகக்கோரியும், முதல்வர் மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து, சென்னை சின்னமலை, ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x