Published : 26 Jan 2019 11:36 AM
Last Updated : 26 Jan 2019 11:36 AM

மாநகர குடிநீர் தேவையை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து நீர் எடுக்க நடவடிக்கை

பருவமழை குறைவாக பெய்த நிலை யில், மாநகர குடிநீர் தேவையை சமாளிக்க திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறு களில் இருந்து குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 352 மிமீ மட்டுமே மழை கிடைத்தது. இது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட 55 சதவீதம் குறைவு. அதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங் கும் செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் நேற்றைய (ஜன.25) நிலவரப்படி மொத்த கொள்ளளவில் (11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி), 1088 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 865 மில்லியன் கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மாநகரத் துக்கு தேவையான குடிநீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லி யன் லிட்டர், வீராணம் திட்டத்திலிருந்து 180 மில்லியன் லிட்டர், ஏரிகளில் இருந்து 270 மில்லியன் லிட்டர் என மொத்தம் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. ஏரிகளில் உள்ள நீர் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதால், திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறு களில் இருந்து தினமும் 120 மில்லி யன் லிட்டர் குடிநீரை எடுக்க திட்டமிட்டி ருக்கிறோம். அதற்காக விருப்பம் உள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உடன்பாடு எட்டப் பட்ட பின்னர், விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு நீரை கொண்டு வந்து விநி யோகம் செய்ய இருக்கிறோம். தேவைக்கு ஏற்ப சிக்கராயபுரம் கல் குவாரி, போரூர் ஏரி, கொளத்தூர் ரெட்டேரி ஆகியவற்றில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். ஏரியில் இருந்து நீர் எடுப்பது குறைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x