Published : 02 Jan 2019 05:08 PM
Last Updated : 02 Jan 2019 05:08 PM

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 8-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என, சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆளுநர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறம்பட நிர்வாகம் நடத்துவதாகப் பாராட்டிப் பேசினார்.

இதனிடையே, ஆளுநர் உரைக்கு நடுவே எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'கஜா' புயல் நிவாரணம் பற்றாக்குறை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பினார். ஆனால், ஆளுநர் தொடர்ந்து பேசவே, திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 3 ஆம் தேதி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், 'நெல்' ஜெயராமன், மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன், 2018 ஆம் ஆண்டு 'கஜா' புயல் காரணமாக உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மேலும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோருக்கு துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்மொழிய இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

4, 5, 7 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இடையில், 6 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆம் தேதி, 2018-2019 ஆம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை, 2018-2019 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு, 2018-2019 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்து விவாதமின்றி நிறைவேற்றுதல், ஏனைய அரசு அலுவல்கள் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x