

சென்னை மாநகராட்சியில் காணும் பொங்கல் பண்டிகை தினத்தன்று 4,610 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.
இது குறித்த சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்:
“சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 கோட்டங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக 19,200 தூய்மை பணியாளர்கள் (தனியார் மற்றும் Nulm உட்பட) 5400 மூன்று சக்கர மிதிவண்டிகள், 14,500 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள், 370 காம்பேக்டர் (கனரக மற்றும் இலகுரக), 22 டாரஸ் கனரக வாகனங்கள், 19 இயந்திர பொக்லைன்கள், 57 ஸ்கிட் லோடர் இயந்திரங்கள், 21 முன் பளுதூக்கும் லோடர்கள் மூலமாக தினந்தோறும் சராசரியாக சுமார் 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை காணும் பொங்கல் திருநாளான 17.01.2019 வியாழக்கிழமை அன்று சுமார் 4,610 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டது.
தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதலாக 125 எண்ணிக்கையுள்ள துப்புரவு பணியாளர்கள் காலை மாலை என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு சுமார் 15.0 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக கடற்கரை பகுதியில் 6 மணல் சலிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 5.5 மெட்ரிக் டன் குப்பை எடுக்கப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட்நகர்) கூடுதலாக 35 துப்புரவு பணியாளர்களை காலை மாலை சுழற்சி முறையில் பணியமர்த்தி சுமார் 5.5 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக கடற்கரை பகுதியில் 2 மணல் சலிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 1.5 மெட்ரிக்டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் அதிகமாக கூடுவது உத்தேசிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை மாலை சுழற்சி முறையில் இரண்டு அவசர கால நடமாடும் மருத்துவக் குழுக்கள் மெரினா கடற்கரையிலும், சுழற்சி முறையில் ஒரு நடமாடும் மருத்துவக் குழு எலியட்ஸ் கடற்கரையிலும் அமைக்கப்பட்டது.
மேலும், கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் சுழற்சி முறையில் ஒரு மருத்துவக் குழுவும் பெருநகர சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் ஜன.01 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஜன 01 முதல் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜன.18 அன்று வரை சுமார் 67.72 மெட்ரிக்டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு திடக்கழிவு முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோட்டங்களிலும் பழுதடைந்த குப்பைத் தொட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட்டு, நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் கூடுதல் லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இப்பணிகள் துணை ஆணையாளர் (சுகாதாரம்) மூலம் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தீர்க்கும் விதமாக (Swachhata App) தனிச் செயலி உருவாக்கப்பட்டதில் 48,318 நபர்கள் பதிவிறக்கம் செய்து பயனடடைந்துள்ளனர். இச்செயலி மூலமாக 18,528 புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.