

சென்னை சூளைமேட்டில் வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.6.88 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், சொகுசுகார், 21 லட்சம் ரொக்கப்பணம் பிடிபட்டது. கும்பலின் தலைவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொங்கல் போன்ற விழாக்கால நேரங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதை பயன்படுத்தி சென்னைக்கு தங்கம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. சென்னையில் இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்களை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.
வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னை சூளைமேட்டில் கடத்தலில் ஈடுபடும் முக்கிய புள்ளியின் வீட்டில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.6.88 கோடி மதிப்புள்ள 20.6 கிலோ தங்கக்கட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய பி.எம்.டபில்யூ கார் மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் முக்கிய கடத்தல் புள்ளி அவரது உறவினர்கள், நண்பர்கள், வெளிநாட்டுக்கு தங்கத்தை கடத்தும் இரண்டு ஆட்கள் உள்ளிட்ட 4 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் தொழிலில் ஈடுபடும் முக்கிய புள்ளி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்மூலம் வெளிநாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் மூலம் தங்கக்கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது.
தாங்கள் சிக்காமல் இருக்க பல்வேறு விமான நிலையங்கள் மூலம் இக்கடத்தல் நடந்துள்ளதும், தற்போது சிக்கிய தங்கம் துபாயிலிருந்து மும்பை வழியாக சென்னை வந்துள்ளது தெரியவந்துள்ளது. இலங்கையிலிருந்தும் கப்பல் வழியாக கடல் மார்கமாகவும் வந்துள்ளது தெரியவந்தது.