

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 6-வது வார்டு இடைத்தேர்தலில் பெறப்பட்ட வேட்பு மனுக்களை முறையாக பரிசீலிக்காத காரணத்தால் செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சியில் 1 மற்றும் 6-வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது, 1-வது வார்டில் பசுலுல்லா மற்றும் 6-வது வார்டில் தணிகைவேலு ஆகிய 2 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இது குறித்து தணிகைவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், வருமான வரி செலுத்தும் அளவுக்கு தனக்கு வருவாய் இல்லாததால், வேட்புமனுவில் வருமான வரி தொடர்பான பகுதியை நிரப்பவில்லை. இதை காரணம் காட்டி, என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், எனது வேட்புமனுவை செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் நிராகரித்துள்ளார். அதனால் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அடுத்தகட்ட விசாரணையில், 1 மற்றும் 6 ஆகிய 2 வார்டுகளிலும் மனுக்கள் பரிசீலனை முறையாக செய்யப்படாததால், அவற்றுக்கான வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், மாநில நகராட்சி நிர்வாகம், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.