

கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால், அவற்றின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்திருந்தது. பொங்கல் விழாக்கள் காரணமாக விவ சாயிகளும் காய்கறிகளை பறித்து சந்தைக்கு அனுப்பவில்லை. அதனால் அவற்றின் விலை மேலும் அதிகரித் திருந்தது.
இந்நிலையில் தற்போது காய் கறிகளின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று ரூ.20 ஆகவும், ரூ.30-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.25 ஆகவும் குறைந்துள்ளன.
மேலும் பெரிய வெங்காயம் ரூ.11, சாம்பார் வெங்காயம் ரூ.40, உருளைக் கிழங்கு ரூ.17, அவரைக்காய் ரூ.20, முள்ளங்கி, கேரட் தலா ரூ.15 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற காய்கறிகளான கத்தரிக்காய், பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.20, வெண்டைக்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.35, முட்டைக்கோஸ் ரூ.10, முருங்கைக்காய் ரூ.90, பச்சை மிளகாய் ரூ.25 என விற்கப்பட்டு வருகின்றன.
பல காய்கறிகளின் விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது,
“கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் அனுப்பப்படும் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பனிப்பொழிவு, குளிர் இருந்ததால் காய் பிடிப்பு குறைவாக இருந்தது. அதனால் காய்கறிகள் வரத்து குறைந்தது. தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து வருவதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது” என்றனர்.