Last Updated : 24 Jan, 2019 04:38 PM

 

Published : 24 Jan 2019 04:38 PM
Last Updated : 24 Jan 2019 04:38 PM

ரோந்து செல்லும் காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1500 முதல் 2000 வரை பயணப்படியாக வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

ரோந்து செல்லும் காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 1,500 முதல் 2,000 வரை பயணப்படியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அதற்காக அவர்கள் இரு சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்களில் செல்வர். அவ்வாறு பணி காரணமாக செல்லும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான பெட்ரோல் படி வழங்கப்படுவதில்லை என தெரியவருகிறது.

இதற்காக அவர்கள் தங்களின் ஊதியத்தை செலவிடும் நிலை உள்ளது. காவல் துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுவது அடிக்கடி நிகழும் சூழலில் இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதை காவல் துறையினர் தவிர்க்கும் சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆகவே, ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான படியை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு கிராமப்புறம், நகர்ப்புறங்களுக்கு ரோந்துப் பணிகளுக்குச் செல்லும் காவலர்களுக்கு அவர்கள் ரோந்துப்பணி செல்லும் பகுதிகள், வாகனங்களின் எண்ணிக்கை, செலவாகும் எரிபொருள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயணப்படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 1,500 முதல் 2,000 வரை பயணப்படியாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு, 2 மாதத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவிடுவதாகக் கூறி, வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x