

கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணைக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இருவரும் ஆஜராகினர்.
கடந்த 2017 ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷயான், திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக ஷயான் மற்றும் மனோஜ் ஆகியோர் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலுடன் சேர்ந்து பேட்டி அளித்தனர். இதைத் தொடர்ந்து, இருவரின் ஜாமீனையும் ரத்து செய்யக் கோரி, மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி பி.வடமலை, சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜன.29-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.
இதன்படி, இருவரும் உதகை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். இவர்களது வழக்கறிஞர் செந்தில்குமார், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் ‘நாளையே வாதம் செய்ய தயார்’ என தெரிவித்தார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை பிப்.2-ம் தேதி நடைபெற உள்ளதால், அன்றைய தினமே ஜாமீன் ரத்து கோரும் மனுவும் விசாரிக்கப்படும் என்றும், ஷயான் மற்றும் மனோஜ் மீண்டும் ஆஜராகி தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டார்.
சலசலப்பு
ஷயான் மற்றும் மனோஜ் உதகை மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்ததால், கூடுதல் எஸ்.பி. கோபு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமேனி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஷயான் மற்றும் மனோஜை வழக்கறிஞர் ஒருவர் பார் கவுன் சிலுக்குள் அழைத்துச் சென்றார். அதற்கு, அதிமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இரு தரப் பினரிடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதனால், நீதிமன்ற வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது.