

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாகனங்களை இயக்க கொடுக்கக்கூடாது என்கிற விதி இருந்தும் பெற்றோர் கொடுப்பதால் விபத்து ஏற்படுகிறது. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏவில் பேருந்தை மோட்டார் வாகனத்தில் முந்த முயன்ற பிளஸ் டூ மாணவர் பேருந்தின்மீது மோதி உயிரிழந்தார்.
எம்எம்டிஏ காலனி பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் அமுதன் (42). இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அழகுசுந்தரம் (17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சொந்தமாக அதிவேக மோட்டார் சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார்.
இன்று காலை அவரது மோட்டார் சைக்கிளில் மகன் அழகு சுந்தரம் வெளியே சென்றுள்ளார். எம்எம்டிஏ காலனி அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே சென்றபோது முன்னால் 15 ஜி அரசுப்பேருந்து சென்றுள்ளது. அதை முந்தும் முயற்சியில் வலதுபக்கமாக வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்த் திசையில் இருசக்கர வாகனம் வேகமாக வந்துள்ளது.
இதனால் அதன்மீது மோதாமல் இருக்க பக்கவாட்டில் ஒதுங்கும்போது பேருந்தில் மோதி அழகு சுந்தரம் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுதுறை போலீசார் அழகு சுந்தரம் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி, மாணவன் பேருந்தில் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது பேருந்து இவர் மீது மோதி இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானதா? என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனங்களை இயக்க கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும். ஆனால் அது ஏட்டளவில் இருப்பதால் சென்னையில் சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.