

குற்ற பின்னணி உடையவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்யப்படுவதை தவிர்க்க காவல்துறையினர் முறையாக விசாரித்து அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக டிஜிபியிடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பார் கவுன்சில் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தினர்.
அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு நிர்வாக குழு, வழக்கறிஞர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு, வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு முன்பே போஸ்டர் அடித்தல், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ஆரவாரம் செய்தல், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தனர். அவ்வாறு கட்டுப்பாட்டின்றி செயல்பட்ட சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அவர்களில் ஒரு சிலர் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றும், அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் அவர்களின் பதிவு விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.
குற்ற வழக்குகளில் மூன்று வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது என்று இந்திய பார் கவுன்சில் விதி நடைமுறையில் உள்ளது. வழக்கறிஞராக பதிவு செய்யும் ஒருவர் குறித்த சம்பந்தப்பட்ட விவரங்களை காவல்துறையிடம் தான் கேட்க முடியும்.
சட்டப்படிப்பை முடித்த ஒருவர் வழக்கறிஞராக பதிவு செய்யும் பொழுது அவர் சம்மந்தமாக உண்மை விவரங்களை காவல்துறையினர் கொடுத்தால் மட்டுமே தவறான ஒருவர் வழக்கறிஞர் ஆவதை தடுக்க முடியும். எனவே காவல்துறையினர் உண்மை விவரங்களை கொடுக்க வேண்டும் என டிஜிபி இடம் அறிக்கை கொடுத்துள்ளோம்.
சட்டப்படிப்பை முடித்த கோவையை சேர்ந்த ஒருத்தர் மீதும், சென்னை வடபழனியை சேர்ந்த ஒருத்தர் மீதும், காவல்துறையினர் தவறான தகவலை தங்களுக்கு வழங்கியுள்ளனர். இது பல புகார்கள் மூலம் தங்களுக்கு தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனால் தவறான இருவர் வழக்கறிஞராக செயல்படும் சூழலை காவல்துறையே ஏற்படுத்தியுள்ளது. எனவே காவல்துறையினர் முறையாக விசாரித்து உண்மை விவரங்களை தர வேண்டும் என்று டிஜிபி க்கு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் சட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யும் பொழுது பட்டாசு வெடித்தல், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக ஆராவரம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.